Published : 09 Nov 2019 12:22 PM
Last Updated : 09 Nov 2019 12:22 PM

அயோத்தி தீர்ப்பு: அத்வானி, அசோக் சிங்காலுக்கு நன்றி: கோவிந்தாச்சார்யா கருத்து 

புதுடெல்லி

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கிய நிலையில், ராம் ஜென்மபூமி இயக்கத்தை நடத்திய பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, அசோச் சிங்கால் ஆகியோருக்கு ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் கோவிந்தாச்சார்யா நன்றி தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்தது. அதில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம், முஸ்லிம்களுக்கு தனியாக 5 ஏக்கர் நிலத்தை உ.பி. அரசு வழங்க வேண்டும். சர்ச்சைக்குரிய இடத்தை மத்திய அரசு கட்டுப்பாட்டில் வைத்து, கோயில் கட்டுவதற்கு தனியாக அறக்கட்டளை உருவாக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பு குறித்து ஆர்எஸ்எஸ் அமைப்பி்ன் மூத்த தலைவர் கே.என்.கோவிந்த்சார்யா நிருபர்களுக்கு டெல்லியில் பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், " உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது, தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம். இன்னும் 3 மாத காலத்தில் கோயில் கட்டமானப் பணிகள் தொடங்கத் திட்டமிடப்பட உள்ளது. தேசத்தில் சமூக ஒற்றுமையும், மத நல்லிணக்கமும் காக்கப்பட வேண்டும். ராமர் கோயில் என்ற நிலையில் இருந்து ராம ராஜ்ஜியத்துக்கு தேசம் நகர்கிறது

ராமர் கோயில் கட்டலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. ராம் ஜென்மபூமி இயக்கத்தை வெற்றிகரமாக நடத்திய பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, விஸ்வ இந்து பரிஷத் மூத்த தலைவர் அசோக் சிங்கால் ஆகியோருக்குத்தான் இந்த நேரத்தில் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். லட்சக்கணக்கான தொண்டர்கள், மக்கள் ராமர் கோயிலுக்காகத் தியாகம் செய்துள்ளார்கள்" எனத் தெரிவித்தார்.

ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் கோவிந்தாச்சார்யா, கடந்த 1990-ம் ஆண்டு அத்வானி ரத யாத்திரை நடத்தும்போது அவருக்குப் பின்னணியில் இருந்து பலத்த ஆதரவு அளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x