Published : 09 Nov 2019 10:39 AM
Last Updated : 09 Nov 2019 10:39 AM

அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம்; இஸ்லாமியர்கள் விரும்பும் இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட வேண்டும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம், அதற்கான அமைப்பை 3 மாதங்களுக்குள் மத்திய அரசு உருவாக்க வேண்டும், அதற்கு பதில் இஸ்லாமியர்கள் விரும்பும் இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை மத்திய அரசும், உத்தரப் பிரதேச அரசும் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இவ்வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.அப்துல் நசீர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.

தீர்ப்பின் மற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு:

* அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம்.

* அந்த இடத்தில் ராமர் கோயில் கட்ட மத்திய அரசு ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும்.

* 5 ஏக்கர் நிலத்தை வழங்க மத்திய அரசும், உத்தரப் பிரதேச அரசும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். 3 மாதத்தில் இந்த இடம் வழங்கப்பட வேண்டும்.

* இஸ்லாமியர்கள் புதிய மசூதி கட்டிக்கொள்ள வக்போர்டு ஏற்கும் இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட வேண்டும்.

* தீர்ப்பை 3 மாதத்தில் செயல்படுத்த வேண்டும்

* இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் மாற்று நிலம் வழங்கப்பட வேண்டும்.

* சர்ச்சைக்குரிய நிலத்தை 3 தரப்புக்கும் பிரித்து வழங்கி அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியானதல்ல.

* பாபர் மசூதி இருந்த இடம் முழுக்க முழுக்க தங்களுக்குச் சொந்தமான பகுதி என்பதை இஸ்லாமிய அமைப்புகள் நிரூபிக்கவில்லை.

* அரசியலுக்கு அப்பாற்பட்டு சட்டம் நிலைநாட்டப்பட வேண்டும்.

* நிலத்தின் உரிமையை நம்பிக்கை அடிப்படையில் முடிவு செய்ய முடியாது.

* 1857-ம் ஆண்டுக்கு முன்பு வரை அந்த சர்ச்சைக்குரிய இடத்தின் உள்பகுதியில் இந்துக்கள் வழிபடத் தடை இல்லை.

* அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 5 பேரும் ஒருமித்த தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

* சன்னி வக்போர்டுக்கு எதிராக ஷியா வக்போர்டு தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

* ஒருவரின் நம்பிக்கை மற்றவரின் நம்பிக்கையைச் சீர்குலைக்கக் கூடாது.

* தொல்லியல் துறை அறிக்கையை நிராகரிக்க முடியாது.

* நிர்மோகி அகாராவின் வாதம் ஏற்புடையதாக இல்லை.

* காலியிடத்தில் மசூதி கட்டப்படவில்லை.

* அயோத்தி ராமர் பிறந்த இடம் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

* அந்த இடம் பாபர் மசூதி என்பது இஸ்லாமியர்களின் வாதம்.

* பாபர் மசூதி கட்டப்படும் முன்பு அங்கிருந்த இடம் இஸ்லாமிய கட்டுமானம் அல்ல.

* ஆவணங்களின்படி அந்த நிலம் அரசுக்கு சொந்தமானது.

* நடுநிலையைக் காக்கும் பொறுப்பு நீதிமன்றத்துக்கு உள்ளது.

பின்னணி:

அயோத்தியில் சர்ச்சைக் குரிய நிலத்தை இந்து மற்றும் முஸ்லிம் அமைப்புகள் உரிமை கோரி வருகின்றன. இந்த வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்றம் விசாரித்தது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாடா, ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கடந்த 2010 செப்டம்பர் 30-ம் தேதி அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இவ்வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.அப்துல் நசீர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த மார்ச் 8-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அயோத்தி ராமஜென்ம பூமி- பாபர் மசூதி நில விவகாரத்தில் சுமுக தீர்வு காண 3 பேர் கொண்ட சமரசக் குழுவை அரசியல் சாசன அமர்வு நியமித்தது.

இந்த குழுவில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கலிபுல்லா, வாழும் கலை அமைப்பின் தலைவர் ரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இடம் பெற்றனர். இந்த குழுவின் பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் அயோத்தி வழக்கில் நாள்தோறும் விசாரணை நடத்தப்பட்டது. நாற்பது நாட்கள் நடைபெற்ற விசாரணையில் இருதரப்பு வாதங்கள் கடந்த 16-ம் தேதியுடன் நிறைவடைந்தது.

இதனிடையே, 3 பேர் அடங்கிய சமரசக் குழு கடந்த மாதம் 16-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ரகசிய அறிக்கையை தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வரும் 17-ம் தேதி ஓய்வு பெறுகிறார். எனவே அதற்கு முன்னதாக இன்று காலை தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.அதன்படி 5 நீதிபதிகளும் தங்கள் தீர்ப்பை வழங்கி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x