

புதுடெல்லி
அயோத்தி நில விவகார வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்க இருக்கும் நிலையில், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா இன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் முக்கியத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கைத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.அப்துல் நசீர் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் தொடர்ந்து 40 நாட்கள் விசாரணை நடத்தி முடித்துள்ளது.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வரும் 17-ம் தேதி ஓய்வு பெறுவதையடுத்து, அயோத்தி வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு இறுதித் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கட்சியின் முக்கியத் தலைவர்களுடன் கட்சியின் அலுவலகத்தில் இன்று காலை அவசர ஆலோசனை நடத்த உள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளனர்.
பாஜக தலைமை அலுவலகத்துக்கு இன்று காலை 10 மணிக்கு வர உள்ள அமித் ஷா கட்சித் தலைவர்களுடன் கட்சியின் நிலைப்பாடு குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
இதற்கிடையே ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின் நண்பகலுக்கு மேல் ஊடகங்களைச் சந்திக்க உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஐஏஎன்எஸ்