Published : 09 Nov 2019 09:36 am

Updated : 09 Nov 2019 09:37 am

 

Published : 09 Nov 2019 09:36 AM
Last Updated : 09 Nov 2019 09:37 AM

அயோத்தி தீர்ப்பு: பல்வேறு மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; உ.பி. நகரங்களில் இணையதள சேவை துண்டிப்பு

ayodhya-on-edge-ahead-of-verdict-all-educational-institutions-closed-in-up-till-monday-elaborate-security-across-country
உ.பி அயோத்தி நகரில் போலீஸார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ள காட்சி : படம் ஏஎன்ஐ

புதுடெல்லி

அயோத்தி நில விவகார வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்க இருக்கும் நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் திங்கள்கிழமை வரை விடுமுறை அறிவித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாடா, ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கடந்த 2010 செப்டம்பர் 30-ம் தேதி அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மேல்முறையீட்டு வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.அப்துல் நசீர் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் தொடர்ந்து 40 நாட்கள் விசாரணை நடத்தி முடித்துள்ளது.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வரும் 17-ம் தேதி ஓய்வு பெறுவதையடுத்து. அயோத்தி வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு இறுதித் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக அயோத்தி நகரம் அமைந்துள்ள உத்தரப் பிரதேசம் மாநிலம் முழுவதும் உச்சகட்டப் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. 4 ஆயிரம் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். எந்தவிதமான சர்ச்சைக்குரிய கருத்துகளையும் யாரும் சமூக வலைத்தளங்களில் பரப்பாமல் இருக்க தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வரும் திங்கள்கிழமை வரை மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. விடுமுறையில் ஊருக்குச் சென்றுள்ள அனைத்து போலீஸாரும் உடனடியாக பணிக்குத் திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது. பதற்றம் நிறைந்த 78 போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிரமான பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் அலிகார், ஆக்ரா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இணையதள இணைப்பை நேற்று இரவு போலீஸார் துண்டித்தனர். எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் நடக்காமல் தடுக்கும் பொருட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸார் இந்த நடவடிக்கையை எடுத்ததாகத் தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீஸ் டிஜிபி ஓ.பி.சிங் கூறுகையில், "தேவையில்லாத எந்த வதந்திகளும் பரவாமல் தடுக்க, தேவையான மாவட்டங்களில் இன்டர்நெட் இணைப்பைத் துண்டித்துள்ளோம். சர்ச்சைக்குரிய கருத்துகள் யாரேனும் தெரிவிக்கிறார்களா என்பதைக் கண்காணிக்க 673 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு சமூக ஊடகங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

ஆக்ரா, அலிகார்க், மீரட், மொராதாபாத், லக்னோ, வாரணாசி, பிரக்யாக்ராஜ், கோரக்பூர் உள்ளிட்ட 31 நகரங்கள் பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டு அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுமையும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்

லக்னோ நகரில் தீர்ப்பு குறித்து அச்சமடைந்த மக்கள் நள்ளிரவே காய்கறிகள், டீசல், பெட்ரோல் போன்றவற்றை வாங்கி வைத்தனர். சிலர் ஏ.டி.எம் மையத்துக்குச் சென்று முன்கூட்டியே பணத்தை எடுத்து வைத்தனர். மேலும், இன்று காலை முதல் மக்கள் பால், பழங்கள், உணவுப்பொருட்கள் ஆகியவற்றைக் கடைகளில் நீண்ட வரிசையில் நின்று வாங்கிச் சென்றனர்

தலைநகர் டெல்லியில் எந்த விதமான அசம்பாவிதங்களும் நடக்காமல் தவிர்க்கவும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் பதற்றமான இடங்களில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்கள், வாட்ஸ் அப் போன்றவற்றில் சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பரப்புவோர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் மும்பை நகரில் வரும் 18-ம் தேதி வரை போலீஸார் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர். 5 நபர்களுக்கு மேல் யாரும் செல்லக்கூடாது என்று போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அங்கு எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடக்காமல் தடுக்க போலீஸார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு இடங்களில் போலீஸார் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர். பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
கர்நாடக மாநிலத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஐஏஎன்எஸ்

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

Ayodhya on edge ahead of verdictAll educational institutions closedElaborate security across countrySupreme Court judgement#AYODHYAVERDICT

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author