

ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் முன்னாள் ராணுவ வீரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் மத்திய அமைச்சரும் முன்னாள் ராணுவ தலைமை தளபதியுமான வி.கே.சிங்கின் மகள் மிருனாளினியும் நேற்று இணைந்தார்.
ராணுவத்தில் பணியாற்றும் ஓர் அதிகாரியின் மனைவியான மிருனாளினி இதுகுறித்து கூறியதாவது:
முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. நியாயமான இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 2 மாதங்களாக இங்கு போராட்டம் நடைபெறுகிறது. முன்னாள் ராணுவ வீரரின் மகள் என்ற முறையில் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க இங்கு வந்துள்ளேன்.
இங்கு வருவதற்காக எனது தந்தையிடம் (மத்திய அமைச்சர் வி.கே.சிங்) அனுமதி பெறவில்லை. அடுத்த சில ஆண்டுகளில் நானும் முன்னாள் ராணுவ வீரரின் மனைவியாகிவிடுவேன். முன்னாள் ராணுவ வீரர்களின் நியாயமான இந்தக் கோரிக்கையை பிரதமர் நரேந்திர மோடி விரைவில் நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.