Published : 09 Nov 2019 07:06 AM
Last Updated : 09 Nov 2019 07:06 AM

கர்நாடக இடைத்தேர்தலை தள்ளி வைக்கக் கோரிக்கை தகுதி நீக்கப்பட்ட எம்எல்ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு

இரா.வினோத்

புதுடெல்லி

கர்நாடகாவில் டிசம்பர் 5-ம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் கடந்த ஜூலை மாதம் முதல்வராக இருந்த குமாரசாமிக்கு எதிராக காங்கிரஸ், மஜதவை சேர்ந்த 17 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தனர். இதனால் அவரது ஆட்சி கவிழ்ந்த நிலையில், சட்டப்பேரவைத் தலைவர் ரமேஷ்குமார் 17 பேரையும் தகுதி நீக்கம் செய்தார். வருகிற 2023ம் ஆண்டு வரை அவர்கள் தேர்தலில் போட்டியிடவும் தடை விதித்து உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்களும் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டனர். இவ்வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் கடந்த மாதம் 25ம் தேதி, தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையம் கர்நாடகாவில் காலியாகவுள்ள 15 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் டிசம்பர் 5ம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளது. இதன் வேட்பு மனு தாக்கல் வரும் 11ம் தேதி தொடங்கி 18ம் தேதி வரை நடக்கிறது.

இதனிடையே தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்களின் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி நேற்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன்னிலையில் ஆஜரானார். அப்போது, “கர்நாடகாவில் வரும் டிசம்பர் 5-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வரும் 11ம் தேதி தொடங்கி 18ம் தேதியுடன் நிறைவடைகிறது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்களின் வழக்கில் இன்னும் தீர்ப்பு வெளியாகாததால், 17 பேரும் இடைத்தேர்தலில் போட்டியிடுவது கேள்விக் குறியாகியுள்ளது. எனவே டிசம்பர் 5ம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலை தள்ளி வைக்க வேண்டும்''என வாதிட்டார்.

இதற்கு பேரவைத் தலைவர் ரமேஷ் குமார் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “அரசியலமைப்பு சட்டத்தின்படி பேரவை விதிமுறைகளை மீறிய 17 பேர் மீதும் பேரவைத் தலைவர் ரமேஷ் குமார் நடவடிக்கை எடுத்துள்ளார். இவ்வழக்கின் விசாரணை விரைவாக நடத்தப்பட்டு தற்போது தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 பேரின் கோரிக்கையை ஏற்று, அக்டோபர் 21ம் தேதி நடைபெற இருந்த இடைத்தேர்தல் டிசம்பர் 5ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

தற்போது மீண்டும் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என கோருவதை ஏற்க முடியாது. இவ்வழக்கில் தீர்ப்பு தேதி அறிவிக்கப்படாத நிலையில், மனுதாரர் தரப்பு அவசரம் காட்டுவது தேவையற்றது. மேலும் பேரவைத் தலைவரின் அதிகாரம் குறித்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் கேள்வி எழுப்பியுள்ளதால் சட்ட குழப்பம் ஏற்பட்டுள்ளது. எனவே இவ்வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டும்'' என வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதி என்.வி.ரமணா, “இடைத்தேர்தல் தேதியை மாற்றிக் கொண்டே இருக்க முடியாது. தேர்தல் ஆணையம் அதற்கான பணிகளை ஏற்கெனவே தொடங்கிவிட்டது.

இந்த வழக்கில் தீர்ப்பு எழுதும் பணிகள் தொடங்கி நடந்துவருகிறது. குறிப்பிட்ட தேதிக்குள் தீர்ப்பை வழங்குமாறு மறைமுகமாக அழுத்தம் கொடுக்கக் கூடாது. பேரவைத் தலைவரின் முடிவுக்கு எதிரான வழக்கின் விசாரணை முடிந்துவிட்டதால், தற்போதைய கோரிக்கையை இதனுடன் சேர்ந்து விசாரிக்க முடியாது. எனவே இடைத்தேர்தல் தொடர்பாக புதிய மனு தாக்கல் செய்யுங்கள்'' எனக்கூறி, வழக்கை ஒத்திவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x