Published : 08 Nov 2019 08:38 PM
Last Updated : 08 Nov 2019 08:38 PM

‘‘நான் பொய் சொல்வதாக கூறுபவர்களுடன் இனிமேல் பேசமாட்டேன்’’-  பாஜக மீது உத்தவ் தாக்கரே கடும் விமர்சனம்

மும்பை

நான் பொய் சொல்வதாக கூறும் பாஜகவினருடன் இனிமேல் பேச மாட்டேன் என சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே கடுமையாக விமர்சித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் 288 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நடந்த தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாஜகவுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கு 56 இடங்களும் கிடைத்தன. ஆட்சி அமைக்க 146 இடங்கள் தேவை. பாஜக, சிவசேனா கூட்டணிக்கு ஆட்சி அமைக்கப் போதுமான பெரும்பான்மை இடங்கள் இருந்தபோதிலும் கருத்தொற்றுமை இல்லாததால் இழுபறி நீடிக்கிறது.

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் புதிய அரசு அமைவதில் முடிவு எட்டப்படாத நிலையில் இன்றுடன் பதவிக் காலம் முடிவதால் முதல்வர் பதவியில் இருந்து தேவேந்திர பட்னாவிஸ் விலகினார். ஆளுநரைச் சந்தித்து ராஜினாமா கடிதத்தை அவர் அளித்தார்.

இந்த நிலையில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தனது கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

‘‘நான் பொய் சொல்வதாக தேவேந்திர பட்னாவிஸ் கூறியிருக்கிறார். நாங்கள் எந்த காலத்திலும் பொய் சொன்னதில்லை. அமித் ஷாவும், தேவேந்திர பட்னாவிஸும் எனது வீட்டுக்கு வந்தார்கள். நான் அவர்களை தேடி செல்லவில்லை.

மக்களவைத் தேர்தலுக்கு முன்பு, முதல்வர் பதவி சுழற்சி முறையில் அமைய வேண்டும் என்பது உட்பட ஆட்சி பகிர்வு குறித்த எங்கள் கோரிக்கையை அமித் ஷா ஏற்றுக் கொண்டார். முதல்வர் பதவி வேண்டும் எனக்கூறியபோது கூட்டணியை ஏற்றுக் கொள்வதாக கூறினார்.

அப்போது கூறியதை அவர்கள் ஏற்றுக் கொண்டனர். இனிமேல் அவர்களிடம் பேச மாட்டேன். நான் பொய் சொல்பவர் என கூறும் அவர்களுடன் பேசமாட்டேன். மகாராஷ்டிர மக்களுக்கு யார் பொய் பேசுகிறார்கள், யார் உண்மை பேசுகிறார்கள் என தெரியும்.

பாஜகவை பொறுத்தவரையில் கூடிய விரைவில் அவர்கள் அரசு அமைக்க வேண்டும். இல்லையென்றால் எந்த ஒரு கட்சிக்கும் தங்களுக்குரிய அரசு அமைக்க கூடிய உரிமை உள்ளது. சிவசேனா எம்எல்ஏக்களை இழுக்க பாஜக முயற்சி செய்யும் என்பதால் அவர்கள் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x