Published : 08 Nov 2019 04:56 PM
Last Updated : 08 Nov 2019 04:56 PM

‘‘கர்தார்பூர் செல்ல முதல் நாளிலேயே கட்டணம் கட்டாயம்’’ - பாகிஸ்தான் திடீர் அறிவிப்பு

புதுடெல்லி

கர்தார்பூர் வழித்தடம் நாளை திறக்கப்படும் நிலையில் முதல் நாள் இந்திய யாத்ரீகர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்த நிலையில் தற்போது கட்டணம் செலுத்த வேண்டும் என அந்நாடடு வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ள பகுதி கர்தார்பூர். சீக்கிய மதத்தை தோற்றுவித்தவரான குருநானக் தேவ், தமது இறுதி காலத்தை இங்கு கழித்ததாக வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால், அவரது நினைவாக கர்தார்பூரில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ‘தர்பார் சாஹிப்' என்ற பெயரில் குருத்வாரா அமைக்கப்பட்டது.

இந்த குருத்வாராவுக்கு செல்வது என்பது சீக்கியர்களின் கடமைகளில் ஒன்றாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. எனினும், பாகிஸ்தானுக்கு விசா வாங்கி செல்வதில் பல்வேறு சிரமங்கள் இருந்ததால் கர்தார்பூர் குருத்வாராவுக்கும் இடையே வழித்தடம் அமைக்க இருதரப்பிலும் முடிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே கர்தார்பூர் வழித்தடம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. கர்தார்பூர் வழித்தடத்தை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வரும் 9-ம் தேதி திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு இந்திய அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்களுக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது.

கர்தார்பூர் வழித்தட நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் சீக்கிய பக்தர்களுக்கு முதல் நாள் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது, பாஸ்போர்ட் தேவையில்லை, 10 நாட்களுக்கு முன்பு பதிவு செய்தால் போதும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்தார்.

ஆனால் அதனை ஏற்க பாகிஸ்தான் ராணுவம் மறுத்துள்ளது. இந்திய யாத்ரீகர்கள் அனைவரும் கட்டாயம் பாஸ்போர்ட் கொண்டு வர வேண்டும் என பாகிஸ்தான் ராணுவ செய்தித்தொடர்பாளர் அசீப் கபார் தெரிவித்தார். அதுபோலவே கட்டணம் செலுத்த வேண்டும் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை இன்று திடீரென அறிவித்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுதுறை அலுவலகம் தரப்பில் தெரிவிக்கையில் ‘‘கர்தார்பூர் வரும் சீக்கிய யாத்ரீகர்கள் ஒவ்வொருவரும் கட்டணம் 20 டாலர்கள் தொகை செலுத்த வேண்டும். இதி்ல் எந்த மாற்றமும் இல்லை.’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் முதல்நாள் திறப்பு விழாவில் பங்கேற்க வருமாறு இந்தியாவில் உள்ள பிரமுகர்களுக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ள நிலையில் அவர்களுக்கும் கட்டணம் உண்டா என்பது குறித்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x