Published : 08 Nov 2019 04:42 PM
Last Updated : 08 Nov 2019 04:42 PM

28 ஆண்டுகளுக்குப் பின் ராகுல், சோனியா, பிரியங்காவுக்கு எஸ்பிஜி பாதுகாப்பு வாபஸ்

புதுடெல்லி

28 ஆண்டுகளுக்குப் பின் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எம்.பி. ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்புப் படை பாதுகாப்பை (எஸ்பிஜி) மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

இனிமேல் இந்தியாவில் பிரதமர் மோடிக்கு மட்டுமே சிறப்பு பாதுகாப்புப் படை பாதுகாப்பு வழங்கப்படும். வேறு யாருக்கும் இல்லை.

ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட பின் சோனியா காந்தி குடும்பத்தாருக்கு எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. 28 ஆண்டுகளாக அதன் பாதுகாப்புக்குள் சோனியா குடும்பத்தினர் இருந்து வந்தனர். இப்போது முதல் முறையாக அந்த பாதுகாப்பு வளையம் தளர்த்தப்படுகிறது.

இனிமேல் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகிய மூவருக்கும் சிஆர்பிஎப் மூலம் வழங்கப்படும் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வழங்கப்பட்ட சிறப்பு பாதுகாப்புப் படை பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது. அதற்குப் பதிலாக சிஆர்பிஎப் சார்பில் வழங்கப்படும் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்துக் கருத்துத் தெரிவிக்க உள்துறை அமைச்சகம் மறுத்துவிட்டது.

ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் வெளிநாடுகளுக்குத் தனிப்பட்ட ரீதியில் செல்லும்போது, டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தோடு எஸ்பிஜி பிரிவினரை நிறுத்திவிட்டு, தனிப்பட்ட முறையில் செல்கிறார்கள். எஸ்பிஜி பிரிவினரையும் திருப்பி அனுப்பி வைத்து வந்தனர்.

இந்நிலையில் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது ராகுல் காந்தி எஸ்பிஜி பிரிவினரை வரவிடாமல் தடுப்பது குறித்து கடந்த 2017-ம் ஆண்டு உள்துறை அமைச்சகத்திடம் தெரிவிக்கப்பட்டு, 2018-ம் ஆண்டில் சில முக்கிய மாற்றங்கள் பாதுகாப்பு விதிகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டது.

அதன்படி, எஸ்பிஜி பாதுகாப்பில் இருப்பவர்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் எப்போதும் பாதுகாப்பு அளிக்கும் வகையில், உடன் செல்லும் வகையில் சிறப்புப் பாதுகாப்பு அளிக்கும் படைப்பிரிவின் விதிமுறையில் மாற்றம் செய்யப்பட்டது.

இதற்கிடையே உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஒவ்வொரு ஆண்டும் எஸ்பிஜி பாதுகாப்பில் இருப்பவர்கள் பாதுகாப்பு குறித்து விரிவான மறு ஆய்வு செய்யப்படும். அந்த வகையில் இப்போது சோனியா காந்தி குடும்பத்தின் பாதுகாப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டதில், அவர்களுக்குப் பெரிய அளவுக்கு அச்சுறுத்தல் இல்லை என்பது தெரியவந்தது. இதனால், எஸ்பிஜிக்குப் பதிலாக மற்ற படையினர் பாதுகாப்பு வழங்கப்படஉள்ளது" எனத் தெரிவித்தார்.

கடந்த 10 ஆண்டுகளாக நோயில் வாஜ்பாய் இருந்தபோதிலும் கூட அவருக்கு எஸ்பிஜி பாதுகாப்பு திரும்பப் பெறப்படவில்லை. ஆனால், அடிக்கடி பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக செல்லும் மன்மோகன் சிங், சோனியா, ராகுல், பிரியங்காவுக்கு எஸ்பிஜி பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது கேள்வியை எழுப்பியுள்ளது.

கடந்த 1985-ம் ஆண்டு இந்திரா காந்தி கொல்லப்பட்ட பின் ராணுவத்தின் ஒரு பிரிவினரால் எஸ்பிஜி படை அமைக்கப்பட்டது. கடந்த 1991-ம் ஆண்டு ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட பின் எஸ்பிஜி சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டு, அனைத்து முன்னாள் பிரதமர்கள், பிரதமர் குடும்பத்தினருக்கு எஸ்பிஜி பாதுகாப்பு வழங்குவது என மாற்றியமைக்கப்பட்டது.

கடந்த 1999-ம் ஆண்டு வாஜ்பாய் அரசு எஸ்பிஜி பாதுகாப்பு விஷயத்தில் மறு ஆய்வு செய்தது. அதன்படி முன்னாள் பிரதமர்கள் நரசிம்ம ராவ், தேவகவுடா, ஐ.கே.குஜ்ரால் ஆகியோருக்கு எஸ்பிஜி பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது

வாஜ்பாய் அரசு கொண்டுவந்த திருத்தத்தின்படி, ஒருபிரதமர் ஆட்சியில் இருந்து அகன்றபின், முதலாம் ஆண்டுக்குப் பின், ஒவ்வொரு ஆண்டும் அவருக்கு இருக்கும் அச்சுறுத்தல்களை ஆய்வு செய்து பாதுகாப்பை வழங்க மத்திய அரசு முடிவு செய்யலாம். 10-வது ஆண்டில் இருந்து பாதுகாப்பு குறைக்கப்படும் எனத் திருத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏஎன்ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x