Published : 08 Nov 2019 03:10 PM
Last Updated : 08 Nov 2019 03:10 PM

ஆட்சியில் சமபங்கு தருவதாக சிவசேனாவிடம் ஒப்பந்தம் செய்யவில்லை: நிதின் கட்கரி விளக்கம்

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி : கோப்புப்படம்

மும்பை

மகாராஷ்டிராவில் ஆட்சியில் சமபங்கு தருவதாகவும், அமைச்சர்களை சம அளவில் பிரித்துக்கொள்வது தொடர்பாகவும் பாஜக-சிவசேனா இடையே தேர்தலுக்கு முன் எந்தவிதமான ஒப்பந்தமும் நடைபெறவில்லை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விளக்கம் அளித்துள்ளார்.

இதேகருத்தை முதல்வர் பட்னாவிஸ் கடந்த வாரம் கூறியபின்தான் சிவசேனா- பாஜக இடையே விரிசல் விழத் தொடங்கியது. இப்போது இதே கருத்தை நிதின் கட்கரியும் தெரிவித்திருப்பதால், இரு கட்சிகளுக்கு இடையே இருக்கும் விரிசலின் அளவு மேலும் பெரிதாகும் என்று தெரிகிறது.

மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த 288 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வென்றன. சிவசேனா-பாஜக கூட்டணிக்குப் பெரும்பான்மைக்குத் தேவையான 145 இடங்களுக்கும் மேலான எம்எல்ஏக்கள் இருந்தபோதிலும் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.

ஆட்சியில் சமபங்கை சிவசேனா கேட்டு பிடிவாதம் செய்கிறது. ஆனால், அவ்வாறு எந்த வாக்குறுதியும் தரவில்லை என்று பாஜக திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இதனால், இரு கட்சிகளுக்கு இடையே இழுபறி கடந்த 15 நாட்களாகத் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், இரு கட்சிகளுக்கு இடையே பிரச்சினையைத் தீர்ப்பதற்காக மத்திய அமைச்சரும், மாநிலத்தின் முன்னாள் பாஜக தலைவருமான நிதின் கட்கரி முயற்சி மேற்கொண்டுள்ளார் என்று தகவல் வெளியானது.

இந்நிலையில், நிதின் கட்கிரி தனது வருகை குறித்து நிருபர்களுக்கு இன்று விளக்கம் அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ''சிவசேனா, பாஜக இடையே ஏற்பட்டுள்ள முரண்பாடுகளைத் தீர்க்க நான் வரவில்லை. அதேசமயம், எனக்குக் கிடைத்த தகவலின்படி, ஆட்சி அதிகாரத்தை சமபங்கு பிரித்துக் கொள்வது தொடர்பாக பாஜகவுக்கும், சிவசேனாவுக்கும் இடையே எந்தவிதமான ஒப்பந்தமும் செய்யப்படவில்லை.

சிவசேனாவின் மறைந்த தலைவர் பால் தாக்கரே ஒருமுறை ஆட்சி அமைப்பது குறித்துக் கூறுகையில், பாஜக- சிவசேனா இடையே கூட்டணி அமைந்து அதில் சிவசேனா அதிகமான இடங்களை வென்றால், முதல்வர் பதவி குறித்துப் பேசும் என்று தெரிவித்திருந்தார்.

நான் இதுவரை எந்த அரசியல் தலைவரையும் சந்திக்கவில்லை. இன்றும் சந்திக்கவில்லை. தேவைப்பட்டால், கட்சித் தலைமை கேட்டுக்கொண்டால் மட்டுமே இந்த விவகாரத்தில் நான் தலையிடுவேன். நான் இன்றுமாலை அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க இருக்கிறேன்" என்று நிதின் கட்கரி தெரிவித்தார்.

இதனிடையே முதல்வர் பட்னாவிஸ் இல்லத்தில் மகாராஷ்டிரா பாஜக தலைவர்களின் முக்கியஸ்தர்கள் கூட்டம் நடக்க உள்ளது. இதில் நிதின் கட்கரி பங்கேற்பது குறித்தும் எந்தவிதமான தகவலும் இல்லை.

அனைத்துப் பதவிகளும் சிவசேனாவுக்கு சரிசமமாகப் பங்கிடப்படும் என்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஒருமுறை கூறிய வீடியோவை சிவசேனா கட்சி அனைத்துத் தரப்பினருக்கும் பகிர்ந்து வருகிறது. இதன் மூலம் இரண்டரை ஆண்டுகாலம் ஆட்சியை சிவசேனா உரிமை கோருகிறது.

ஆனால், பட்னாவிஸ் கருத்தால் முதலில் அதிருப்தி அடைந்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பேச்சுவார்த்தையை ரத்து செய்தார். இப்போது மூத்த தலைவர் கட்கரியும் பேசி இருப்பது சிவசேனா -பாஜக இடையிலான உறவை மேலும் வலுவிழக்கச் செய்யும் என்று கூறப்படுகிறது.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x