முதல்வர் பதவி எங்களுக்குத்தான்; காபந்து அரசை பாஜக தவறாகப் பயன்படுத்தக் கூடாது: சிவசேனா

சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்  மும்பையில் இன்று  பேட்டி அளித்த காட்சி: ஏஎன்ஐ
சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் மும்பையில் இன்று பேட்டி அளித்த காட்சி: ஏஎன்ஐ
Updated on
2 min read

மும்பை

மகாராஷ்டிராவில் பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைத்தால், முதல்வர் பதவியில் சிவசேனாவைச் சேர்ந்தவர்தான அமர்வார். இடைக்கால அரசை பாஜக தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்

மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த 288 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வென்றன. சிவசேனா-பாஜக கூட்டணிக்குப் பெரும்பான்மைக்குத் தேவையான 145 இடங்களுக்கும் மேலான எம்எல்ஏக்கள் இருந்தபோதிலும் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.

ஆட்சி அதிகாரத்தில் சமபங்கு கேட்டு சிவசேனா கட்சி பிடிவாதம் செய்து வருகிறது. ஆனால், எந்தவிதமான வாக்குறுதியும் அளிக்கவில்லை. முதல்வர் பதவியைத் தாரை வார்க்கும் பேச்சுக்கே இடமில்லை என்று பாஜக திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
மாநில சட்டப்பேரவையின் காலம் இன்றுடன் முடிவடைகிறது. பாஜக தலைமையிலான குழு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியைச் நேற்று சந்தித்து பேசினாலும் ஆட்சி அமைப்பது தொடர்பாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

இதற்கிடையே சிவசேனா கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் மாதோஸ்ரீ இல்லத்தில் நேற்று நடந்தது. இதில் அனைத்து எமஎல்ஏக்களும் முடிவு எடுக்கும் அதிகாரத்தை அந்தக் கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு அளித்து தீர்மானம் நிறைவேற்றினர். இதைத் தொடர்ந்து 56 எம்எல்ஏக்களும் தனியார் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.

இன்றுடன் தேவேந்திர பட்னாவிஸ் அரசின் பதவிக்காலம் முடிகிறது என்பதால், இன்று ஏதேனும் அரசியல் மாற்றம் நிகழலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், சிவசேனா இன்னும் தனது பிடியை தளர்த்தவில்லை என்பது அந்த கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் உணர்த்தியுள்ளார்.

மும்பையில் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் நிருபர்களுக்கு இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:

மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்குத்தான் முதல்வர் பதவிஎன்ற கோரிக்கையை பாஜக ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்தக் கட்சியுடன் எந்தவிதமான பேச்சும் நடத்தப்படும்.

இன்றுடன் தேவேந்திர பட்னாவிஸ் பதவிக்காலம் நாளையுடன் முடிகிறது. நாளை அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். காபந்து அரசு என்ற போர்வையில் இருந்துகொண்டு திரைக்குப் பின்னால் இருந்து ஆட்சி செய்ய பாஜக நினைக்கக்கூடாது.

மாநிலத்தில் தனிப்பெரும் கட்சியாக பாஜக இருப்பதாலும், ஆளுநர் அந்தக் கட்சியை ஆட்சி அமைக்க முதலில் அழைத்தாலும் அது குறித்து சிவேசேனா எந்தக் கவலையும் கொள்ளாது.

இரண்டரை ஆண்டுகளுக்கு பாஜக முதல்வர் பதவியைப் பகிர்ந்து அளிப்பதோடு, அமைச்சர் பதவியையும் உரிய அதிகாரத்தில் பகிர்ந்து அளிக்க வேண்டும். நாங்களும் விரைவில் ஆளுநர் கோஷ்யாரியைச் சந்திக்க இருக்கிறோம். தேவேந்திர பட்னாவிஸ் பதவிக்காலம் முடிந்தபின், ஆளுநர்தான் மாநிலத்துக்குப் பொறுப்பாளர்.

இப்போது அரசியலில் நடந்த வரும் சிக்கல் பாஜகவுக்கும், சிவசேனாவுக்கும் இடையிலானது. இதில் மூன்றாவது கட்சியோ அல்லது மூன்றாவது நபரோ அதாவது வலதுசாரி இயக்கத்தைச் சேர்ந்த சாம்பாஜி ஷிண்டேவுக்கோ எந்தவிதமான தொடர்பும் இல்லை.
நாங்கள் எங்கள் எம்எல்ஏக்களை ஹோட்டலில் தங்க வைத்திருப்பதைப் பற்றி காங்கிரஸ் கவலைப்பட வேண்டும். கர்நாடக அரசியல் போன்று மகாராஷ்டிராவில் நடக்காது.

இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்தார்

பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in