Published : 08 Nov 2019 12:51 PM
Last Updated : 08 Nov 2019 12:51 PM

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளைச் செல்லாததாக அறிவிக்கலாம்: முன்னாள் பொருளாதார விவகாரத்துறை செயலாளர் ஆலோசனை

பிரதிநிதித்துவப்படம்

புதுடெல்லி

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மக்களுக்கு எந்த விதமான இடையூறும் இன்றி பண மதிப்பிழப்பு செய்ய முடியும் என்று முன்னாள் மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் எஸ்.சி.கார்க் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

கடந்த 2016-ம் ஆண்டு, நவம்பர் 8-ம் தேதி மத்திய அரசு, நாட்டில் புழக்கத்தில் இருந்த 1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்து இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடையும் தருணத்தில் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை செல்லாததாக அறிவிக்க எஸ்.சி.கார்க் ஆலோசனை வழங்கியுள்ளார்.

நாட்டில் கறுப்புப் பணம், கள்ளநோட்டு, தீவிரவாதத்தை ஒழித்தல், ஊழலை ஒழித்தல் ஆகியவற்றுக்காக புழக்கத்தில் இருந்த 1000, 500 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார்.

அதன்பின் புதிதாக ரூ.2 ஆயிரம் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த நோட்டுகள் தற்போது புழக்கத்தில் இருக்கின்றன. ஆனால், தொடக்கத்தில் அதிகமான அளவு புழக்கத்தில் இருந்த நிலையில், சமீபகாலமாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அதிகமான அளவு புழக்கத்தில் இல்லை என்று பரவலாகக் கூறப்படுகிறது. ஏராளமானோர் பதுக்கி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் எஸ்.சி.கார்க் : படம் உதவிட்விட்டர்

யாருக்கும் எந்தவிதமான பாதிப்பும் இன்றி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பண மதிப்பிழப்பு செய்ய முடியும் என்று முன்னாள் மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் எஸ்.சி.கார்க் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறுகையில், "2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் தற்போது அதிகமான அளவு புழக்கத்தில் இல்லை. காரணம் சிலர் அதை பதுக்கி இருக்கிறார்கள். பெரும்பாலான இடங்களில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் பரிமாற்றத்துக்கு உட்படுத்துவதும் குறைவாகவே இருந்து வருகிறது. பல இடங்களில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பரிமாற்றத்திலேயே இல்லை.

ஆதலால், இதுதான் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளைப் பண மதிப்பிழப்பு செய்துவிடலாம். இதற்கு எளிய வழி இருக்கிறது. எந்தவிதமான மாற்று இல்லாமல் வங்கியில் டெபாசிட் செய்யக் கூறினாலே போதும். வேறு ஏதும் செய்யத் தேவையில்லை. மக்களை சிரமப்படுத்தவும் தேவையில்லை. என்னுடைய கணக்கின்படி, புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளில் மூன்றில் ஒருபங்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருக்கின்றன.

உலகில் பல்வேறு நாடுகளில் டிஜிட்டல் பரிமாற்றம் அதிகரித்துவருகிறது. ஆனால் இந்தியாவில் குறைந்த வேகத்தில்தான் மக்கள் டிஜிட்டல் பரிமாற்றத்துக்கு மாறி வருகிறார்கள். இன்னும் பொருளாதாரத்தில் டிஜிட்டல் பணத்தைக் காட்டிலும் ரொக்கப் பணமே மேலோங்கி இருக்கிறது. இதற்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளைப் பதுக்கி இருப்பதையே உதாரணமாகக் கூறலாம்" என எஸ்.சி.கார்க் தெரிவித்தார்.


ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x