

புதுடெல்லி
2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி கொண்டுவரப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கை என்பது ஒரு தீவிரவாதத் தாக்குதல் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.
நாட்டில் ஊழல், கறுப்புப் பணம், கள்ளநோட்டு ஆகியவற்றை ஒழிக்கும் நோக்கில் நாட்டில் புழக்கத்திலிருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த 2016-ம் ஆண்டு, நவம்பர் 8-ம் தேதி அறிவித்தார்.
50 நாட்களில் அனைத்தும் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டு எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையால் மக்கள் பெரிய துன்பத்துக்கு ஆளாகினார்கள். வங்கியில் தங்களுடைய சேமிப்பை எடுக்க முடியாமல் மக்கள் வேதனைக்கு உள்ளாகினர். இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பொருளாதார வளர்ச்சியிலும் பெரிய அளவுக்குப் பாதிப்பும் ஏற்பட்டது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு இன்றுடன் 3 ஆண்டுகள் ஆகியுள்ளன. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் காட்டமாக கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
அவர் கூறுகையில், "பண மதிப்பிழப்பு எனும் தீவிரவாத நடவடிக்கை எடுக்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகின்றன. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் தேசத்தின் பொருளாதாரம் சீரழிந்தது. ஏராளமான மக்களின் உயிரை எடுத்தது. லட்சக்கணக்கான சிறுதொழில்களை அழித்து, லட்சக்கணக்கான மக்களை வேலையிழக்கச் செய்தது. தீய நோக்கில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் நடத்தியவர்கள் நீதியின் முன் இன்னும் நிறுத்தப்படவில்லை" என்று பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா ட்விட்டரில் கூறுகையில், "சுல்தான் முகமது பின் துக்ளக் கடந்த 1330-ம் ஆண்டு அவரின் அரசின் கரன்சியை செல்லாததாக அறிவித்தார். இன்றைய துக்ளக் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பணத்தைச் செல்லாததாக அறிவித்தார்.
தேசத்தைப் பாதித்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு 3 ஆண்டுகள் முடிந்துவிட்டநிலையில். பொருளாதாரம் சீரழிந்தது, வேலையிழப்பு ஏற்பட்டது. தீவிரவாதமும் நிறுத்தப்படவில்லை, கள்ளநோட்டும் கட்டுப்படுத்தப்படவில்லை. சர்வதேச கடன் தர நிறுவனமான மூடிஸ் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மனிதனால் நடத்தப்பட்ட பேரழிவு நடவடிக்கை என்றது. ஆனால் இதைக் கொண்டுவந்தவர்கள் அமைதியாக இருக்கிறார்கள்’’ எனத் தெரிவித்துள்ளார்.
பிடிஐ