Published : 07 Nov 2019 09:21 PM
Last Updated : 07 Nov 2019 09:21 PM

தேசியவாதம் ஒரு கருத்தியல் விஷம், தனிமனித உரிமைகளைக் கடக்க தயக்கம் காட்டாதது: முன்னாள் துணை குடியரசுத் தலைவர் ஹமித் அன்சாரி

முன்னாள் துணைக் குடியரசுத் தலைவர் ஹமித் அன்சாரி.

சண்டிகர், பிடிஐ

இன்றைய காலக்கட்டத்தில் தேசியவாதம், நாட்டுப்பற்றுடன் சேர்த்து குழப்பிக் கொள்ளப்படுகிறது. ஆனால் இரண்டுக்குமிடையே கருத்திலும் அர்த்தத்திலும் வேறுபாடு உண்டு என்று முன்னாள் துணைக் குடியரசுத் தலைவர் ஹமித் அன்சாரி தெரிவித்தார்.

சீக்கிய சமய நிறுவனர் குருநானக் தேவ் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஹமித் ஹன்சாரி, தேசியவாதம் ஒரு கருத்தியல் விஷம், அது தனிமனித உரிமைகளைக் கடக்க தயங்காதது என்றார்.

சமய நம்பிக்கைகளை உருவாக்கியவர்கள் மதத்தன்மையை உருவாக்கவில்லை. ஆனால் மதத்தை உருவாக்குபவர்களின் அடிப்படை தத்துவங்களை, நெறிமுறைகளை நீர்க்கச் செய்து திரிப்பவர்களால்தான் மதத்தன்மை என்ற ஒன்று உருவாகிறது என்றார் ஹமித் அன்சாரி.

இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தவர்கள் ஊரக மற்றும் தொழிற்துறைக் கூட்டமைப்பு ஆய்வு மையமாகும், இதில் ஹமித் அன்சாரி பேசியதாவது:

“குருநானக், இவரது 550வது பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது. சகோதரத்துவம், நலிவுற்றோர் நலன்கள் இவரது பிரதான சிந்தனையாக இருந்தது. இன்றைய நவீன உலக சொற்பொருளில் கூற வேண்டுமெனில் பற்சமய நம்பிக்கைகள் குறித்த உரையாடலை மொழிந்தார்.தசாப்த காலங்களுக்கு முன்பாக மகாகவி ரவீந்திரநாத் தாகூர் தேசியவாதத்தை ஒரு பேரச்சுறுத்தல் என்றும் மனிதன் கண்டுபிடித்த சக்திவாய்ந்த மயக்க மருந்தும் ஆகும் என்று வர்ணித்தார், மேலும் அவர், தேசத்தை வழிபடும் போக்கிற்கு எதிராகவே தன்னை நிலை நிறுத்தினார். விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், தேசியவாதத்தை ஒரு ‘குழந்தைப் பருவ நோய்’ என்று கூறினார்.

நாட்டுப்பற்று என்பது மாறாக பண்பாட்டு ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் அவசியமான ஒன்று. புனிதமான உணர்வுகளை அது ஊக்குவிக்கிறது. ஆனால் இதுவும் வெறித்தனமாகக் கூடாது அப்படியாகிவிட்டால் ஒரு நாடு எந்த மதிப்பீடுகளைக் காக்க வேண்டும் என்று போராடுகிறதோ அதையே குலைத்து விடும்.

தேசியவாதம் அதன் உச்சஸ்தாயி வடிவத்தில் அதிகாரத்துக்கான ஆசையிலிருந்து வேறுபடுத்தி பார்க்க முடியாதது. தேசியவாதம் ஒரு கருத்தியல் விஷம், இது தனிமனித உரிமைகளைக் கடக்கவும் மீறவும் தயங்காதது. தேசியவாதம் என்பது ஒரேநாடு என்பதுடன் அடையாளப்படுத்திக் கொள்ளப்படுவதாகும். இதனால் நன்மை, தீமை, சரி, தவறு ஆகியவற்றுக்கு அப்பாலானது என்று தன்னை நிறுவிக் கொள்கிறது. தனிநபர் முடிவுகளை, கருத்துகளை நீக்கிவிட்டு தன்னுடைய நலன்களைத் தவிர வேறு இல்லை என்ற ரீதியில் செல்வது.

தேசியவாதம், நாட்டுப்பற்றுடன் எப்போதும் குழப்பிக் கொள்ளப்படுகிறது. இரண்டையும் ஒன்றே போல், பரஸ்பரம் ஒன்றன் இடத்தில் மற்றொன்றை பதிலீடு செய்து புரிந்து கொள்கின்றனர். இரண்டு சொற்களுமே நிலையற்ற மற்றும் பொதிந்து கிடக்கும் அர்த்த தளங்கள் கொண்டவை. எனவேதான் இரண்டையும் கையாள்வதில் எச்சரிக்கை தேவை ஏனெனில் இரண்டுமே உள்ளடக்கம் மற்றும் அர்த்த அளவில் வேறு வேறானவை.

எனவே முடிவு தவிர்க்க முடியாத ஒன்று, கடும் தேசியவாதம், தீவிர மதத்தன்மை இரண்டும் விரும்பத்தகாதது என்பதே அந்த முடிவு. இதற்கான மாற்று மனிதன் எட்டிவிடக்கூடிய தூரத்தில்தான் உள்ளது. மனித சமூகத்தின் விடிவு மற்றும் மகிழ்ச்சி என்பது அமைதி, சமாதானம் என்பதை அடைய, சகிப்புத் தன்மை, உரையாடல், அனுசரிப்பு மற்றும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தன்மை ஆகியவற்றினால் மட்டுமே சாத்தியம் என்று கூறும் மத, ஆன்மீகத் தலைவர்களின் உபதேசத்தின் தர்க்கங்களை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டியுள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x