Published : 07 Nov 2019 06:14 PM
Last Updated : 07 Nov 2019 06:14 PM

கூட்டணியை உடைக்க விரும்பவில்லை; பாஜக தன் வாக்கைக் காப்பாற்ற வேண்டும்: உத்தவ் தாக்கரே

மும்பை, பிடிஐ

மும்பையில் வியாழன் (நவ.7) அன்று கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் நடந்த கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணியை உடைக்க விரும்பவில்லை, ஆனால் பாஜக தன் வாக்குறுதியை காப்பாற்ற வேண்டும் என்று சிவசேனாத் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

தாக்கரே தன் இல்லத்தில் அனைத்துக் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். அப்போது, “முன்பு அமித் ஷாவுடன் தான் அனைத்தும் முடிவு செய்யப்பட்டன. பாஜக தன் வாக்கைக் காப்பாற்ற வேண்டும். பல பத்தாண்டுகளான இந்தக் கூட்டணியை நான் உடைக்க விரும்பவில்லை” என்று கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே சிவசேனா தன் எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் 5 நட்சத்திர விடுதியில் தங்க வைக்கும் என்று தகவல்கள் வெளியாகின, ஆனால் பாந்த்ராவில் உள்ள ரங்ஷர்தா விடுதியில்தான் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சிவசேனா எம்.எல்.ஏ. அப்துல் சத்தர் ரங்ஷர்தா விடுதிக்கு வந்த போது, “மும்பையை விட்டு வெளியேற வேண்டாம் என்று எங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து எம்.எல்.ஏ.க்களும் இங்குதான் சேர்ந்து இருக்கிறோம். கூட்டத்தில் உத்தவ் தாக்கரே எல்லா முடிவுகளையும் எடுக்க வேண்டும் என்று நாங்கள் தெரிவித்து விட்டோம். சிவசேனா முதல்வர் தேவை” என்றார்.

சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் முன்னதாகக் கூறிய போது, “சிவசேனா முதல்வர்தான் என்ற எங்கள் நிலைப்பாட்டை நாங்கள் மாற்றிக் கொள்வதாக இல்லை, சேனா எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் இதனை ஆதரிக்கின்றனர். உத்தவ் என்ன முடிவெடுக்கிறாரோ அதனை ஏற்க இவர்கள் முடிவு எடுத்துள்ளனர். ஆகவே சேனா முதல்வர்தான் மாநிலத்தை வழிநடத்துவார்” என்றார்.

தேவேந்திர பட்னாவிஸும் சிவசேனைக்காரர்தான் என்று பாஜக தலைவர் ஒருவர் கூறியதை சஞ்சய் ராவத்திற்கு சுட்டிக்காட்டிய போது, “யார் தங்களை சிவசேனாக்காரர் என்று அழைத்துக் கொள்கின்றனரோ சிவசேனாவின் அடிப்படைப் பாடத்தை புரிந்து கொள்ள வேண்டும். பாஜக தானும் அரசமைக்காமல் பிறரையும் அரசமைக்க விடாமல் அரசியல் சாசன நெருக்கடிக்குத் தள்ளி வருகின்றனர். 145 எம்.எல்.ஏ.க்கள் பெயர்ப்பட்டியலையும் பாஜக கவர்னரிடம் எடுத்துச் சென்றால் நாங்கள் மகிழ்ச்சியடைவோம்” என்று கூறிய சஞ்சய் ராவத், இதற்கு சிவசேனாவிடம் தீர்வு உள்ளது என்று சூசகமாகத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x