Published : 07 Nov 2019 02:57 PM
Last Updated : 07 Nov 2019 02:57 PM

‘‘பஞ்சாபில் வைக்கோலை எரிக்கும் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள்’’ - புகார் கூறி பாஜக சைக்கிள் பேரணி

புதுடெல்லி

பஞ்சாபில் விவசாய நிலத்தில் வைக்கோலை எரிப்பவர்கள் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் எனக் கூறி டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வீடு நோக்கி பாஜகவினர் சைக்கிளில் பேரணி நடத்தினர்.

டெல்லியில் கடந்த சில ஆண்டுகளாகவே காற்று மாசு ஏற்பட்டு பெரும் பாதிப்பு உருவாகி வருகிறது. டெல்லியை சுற்றியுள்ள உத்தர பிரதேசம், ஹரியாணா, ராஜஸ்தான் உள்ளிட்ட எல்லைப்புற பகுதி விவசாயிகள் தங்கள் நிலத்தில் அறுவடைக்கு பிறகு மிஞ்சிய வைக்கோலை எரிப்பதால் பெருமளவு காற்று மாசு ஏற்படுகிறது. இதையடுத்து விவசாயிகள் நிலத்தில் சருகுகளை எரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் காற்று மாசு இந்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக மோசமான நிலையை தொட்டு, நெருக்கடி நிலையை எட்டியுள்ளது. மக்கள் சுவாசிப்பதில் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.

காற்று மாசு குறியீட்டின் அளவு உச்ச அளவை தொட்டுள்ளது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தடுப்பு ஆணையம் டெல்லி மற்றும் என்சிஆர் மண்டலத்தில் கட்டிடப்பணிகளில் ஈடுபட தடை விதித்தது. பள்ளிகளுக்கும் 8-ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டு இருந்தது.

விவசாயிகள் வயல்வெளிகளில் வைக்கோலை எரிக்காமல் இருக்க கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. உத்தர பிரதேச மாநிலம் பிலிபட்டில் தங்கள் நிலத்தில் காய்ந்த வைக்கோலை எரித்த 300 விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோலவே ஹரியாணா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களிலும் வைக்கோலை எரிக்கும் விவசாயிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் விவசாயிகள் வைக்கோல் எரிக்கும் விவகாரம் தற்போது டெல்லியில் அரசியலாகி வருகிறது. வைக்கோலை எரிக்கும் விவசாயிகளை தடுக்காமல் பாஜகவைச் சேர்ந்த ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் வேடிக்கை பார்ப்பதாக டெல்லி ஆம் ஆத்மி தலைவர்கள் கூறினர்.

இதற்கு பதிலடியாக பஞ்சாபில் விவசாய நிலங்களில் வைக்கோல்களை எரிப்பவர்கள் அம்மாநில ஆம் ஆத்மி எம்எல்ஏக்களே என பாஜக மூத்த தலைவர் விஜய் கோயல் கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து பஞ்சாபில் வைக்கோலை எரிக்கும் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி டெல்லி பாஜகவினர் விஜய் கோயல் தலைமையில், துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவின் வீடு நோக்கி சைக்கிளில் பேரணியாக சென்றனர். அப்போது தங்கள் சைக்கிளில் நெற்கதிர்களையும் எடுத்துச் சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x