

மும்பை
உணவு வீணாவதைத் தவிர்ப்பதற்காகவும் நலிந்த மக்களுக்கு உணவு வழங்குவதற்கும் சமுதாய குளிர்சாதனப் பெட்டி ஒன்றை மும்பை அந்தேரி பகுதியைச் சார்ந்த குடியிருப்புவாசிகள் நிறுவியுள்ளனர்.
நாம் ஒவ்வொரு நாளும் உண்ணும் உணவில் எப்படியோ கொஞ்சம் மீதமாகி விடுகிறது. அல்லது ஒருவர் அல்லது இருவர் சாப்பிடும் அளவுக்குக் கூட சில நாட்களில் மீதமாகிவிடுவதுண்டு. இப்படி மீதமாகும் உணவு எந்த யோசனையும் இல்லாமல் பெரும்பாலும் குப்பைத் தொட்டிக்குத்தான் செல்கிறது.
மும்பையில் உள்ள அந்தேரி பகுதி வாழ் மக்கள் சிலர் இதற்கு ஒரு வழியைக் கண்டுபிடித்துள்ளனர். இங்குள்ள சமுதாய குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்படும் உணவு அப்பகுதியில் பசியோடு வரும் பலருக்கும் மிகவும் உபயோகமாக மாறியுள்ளது. மக்களாகத் தொடங்கியுள்ள இந்தத் திட்டத்திற்கு குடியிருப்புவாசிகள் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.
அப்பகுதிக்கு நேரில் சென்று இது தொடர்பான பலரையும் ஏஎன்ஐ பேட்டி கண்டது.
இதுகுறித்து அந்தேரி மற்றும் வெர்சோவா நலச்சங்கத்தைச் சேர்ந்த குடியிருப்புவாசி ஒருவர் கூறுகையில், ''இதுபோன்ற சமுதாய குளிர்சாதனப் பெட்டிகள் லோகண்ட்வாலா, வெர்சோவா, ஓஷிவாரா, டி.என்.நகர் மற்றும் மீரா சாலை ஆகிய ஐந்து இடங்களில் நிறுவப்பட்டுள்ளன'' என்றார்.
சமுதாய குளிர்சாதனப் பெட்டிகளை நிர்வகித்து வரும் நவீன் குமார் மண்டல் கூறும்போது, ''உணவு வீணாவதைத் தடுக்கவும் உணவு தேவை என்று வருபவர்களுக்கு உணவளிக்கவும் செய்யப்பட்ட ஏற்பாடு இது. இது சாலைகளில் வசிப்பவர்களுக்கும் வேலையற்றவர்களுக்கும் ஏழைகளுக்கும் உதவும்'' என்றார்.
சமுதாய குளிர்சாதனப் பெட்டியைப் பயன்படுத்தும் அப்சல் அன்சாரி, ''நாங்கள் உணவுக்காக 12 மணிக்கு இங்கு வருகிறோம். 1 மணி முதல் 2 மணி வரை உணவைப் பெறுகிறோம். வேலை எதுவும் கிடைக்காத நாட்களில் எங்களைப் போன்றவர்களுக்கு உணவு கிடைப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். பசி என்று இங்கு வந்தால் நிச்சயம் உணவிருக்கும்'' என்றார்.