Published : 07 Nov 2019 02:26 PM
Last Updated : 07 Nov 2019 02:26 PM

மைனாரிட்டி ஆட்சி அமைக்கமாட்டோம்; ஆளுநரிடம் இன்று பாஜக உரிமை கோராது: நிதியமைச்சர் முன்கந்திவார் விளக்கம்

மும்பை

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆளுநரை இன்று சந்தித்து உரிமை கோரமாட்டோம் என்று அம்மாநில நிதியமைச்சரும் மூத்த தலைவருமான முன்கந்திவார் விளக்கம் அளித்துள்ளார்.

மாநில சட்டப்பேரவையின் காலம் நாளை முடிவடைய இருப்பதால் பாஜக தலைமையிலான குழு இன்று ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியைச் சந்திக்க இருப்பதாகத் தகவல் வெளியான நிலையில் அதை மறுத்துள்ளார்.

முதலில் காலையில் ஆளுநரைச் சந்திக்க பாஜகவினர் திட்டமிட்ட நிலையில், சிவசேனா ஆதரவைப் பெற்று அதன்பின் மாலையில் சந்திக்கத் திட்டமிட்டதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில் ஆளுநரை இன்று சந்திக்கும் திட்டமே ரத்து செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த 288 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வென்றன. சிவசேனா-பாஜக கூட்டணிக்குப் பெரும்பான்மைக்குத் தேவையான 145 இடங்களுக்கும் மேலான எம்எல்ஏக்கள் இருந்தபோதிலும் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.

ஆட்சி அதிகாரத்தில் சமபங்கு கேட்டு சிவசேனா கட்சி பிடிவாதம் செய்து வருகிறது. ஆனால், எந்தவிதமான வாக்குறுதியும் அளிக்கவில்லை. முதல்வர் பதவியைத் தாரை வார்க்கும் பேச்சுக்கே இடமில்லை என்று பாஜக திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இதனால் புதிய ஆட்சி அமைவதில் இழுபறி நீடித்து வருகிறது

இந்நிலையில், மாநில நிதியமைச்சர் முன்கந்திவார் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை இன்று பாஜக குழுவினர் சந்தித்து ஆட்சி அமைப்பது தொடர்பாகப் பேசமாட்டார்கள். மாநிலத்தில் மைனாரிட்டி ஆட்சி அமைவதில் பாஜகவுக்கு விருப்பம் இல்லை.

இதற்காக நாங்கள் சிவசேனாவின் எம்எல்ஏக்களை அறத்துக்கு மாறாக குதிரை பேரம் மூலம் இழுப்போம் என்ற குற்றச்சாட்டையும் மறுக்கிறேன். அதுபோன்ற செயல்பாடும், பேச்சும் நியாயமற்றது. எங்களுக்குள் பிரச்சினை இருக்கிறது. இதைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்போம்.

ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆளுநரிடம் விரிவான ஆலோசனை நடத்தி, சட்ட வல்லுநர்களிடம் கலந்தாய்வு செய்து நிதானமாக முடிவு எடுப்போம். மக்கள் அளித்த முடிவை பாஜக எப்போதும் மதிக்கும். பட்னாவிஸ் பாஜக தலைவர் மட்டும் அல்ல, மாநிலத்தின் முதல்வரும் அவர்தான். அவரின் தலைமையை எந்தவிதமான சந்தேகமும் இன்றி, கட்சி எல்லைகள் கடந்து ஏற்க வேண்டும்.

பாஜகவுடன் இணைந்துதான் ஆட்சி அமைப்போம் என்று சிவசேனா பல்வேறு வழிகளிலும் தெரிவித்துள்ளது. ஆனாலும், சில தடைகள் இருந்து வருகின்றன. அந்தத் தடைகள் அடையாளம் கண்டு அகற்றப்படும். ஆனால், அந்தத் தடைகள் நிச்சயம் பாஜகவிடம் இருந்து வரவில்லை என்பதை மட்டும் உறுதியாகக் கூறுகிறோம்.

சிவசேனாவில் இருந்து பாஜகவுக்கு எம்எல்ஏக்கள் வருவார்கள் என்று நான் நினைக்கவில்லை. சிவசேனா எம்எல்ஏக்கள் அவர்களின் தலைமைக்கு உண்மையாக இருப்பார்கள் என்று எங்களுக்குத் தெரியும். கட்சியை உடைத்துவிடுவார்கள் என்ற பேச்சு சரியல்ல. மக்களின் தீர்ப்புக்கு இது விரோதமானதாகும்.

அதேபோல, நிதின் கட்கரி மாநிலத்தின் முதல்வராக நியமிக்கப்படுவார் என்ற பேச்சும் ஊகத்தின் அடிப்படையிலானது. மாநில அரசியலுக்கு கட்கரி ஒருபோதும் வரமாட்டார்''.

இவ்வாறு முன்கந்திவார் தெரிவித்தார்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x