Published : 07 Nov 2019 01:32 PM
Last Updated : 07 Nov 2019 01:32 PM

மகாராஷ்டிராவில் பட்னாவிஸ்தான் முதல்வர்; ஆர்எஸ்எஸ் தலைவரை இழுக்காதீர்கள்: நிதின் கட்கரி விளக்கம்

நாக்பூர்

மகாராஷ்டிராவில் பாஜக தலைமையில் ஆட்சி அமையும். தேவேந்திர பட்னாவிஸ்தான் முதல்வர் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விளக்கம் அளித்தார்.

மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த 288 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வென்றன. சிவசேனா-பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மைக்குத் தேவையான 145 இடங்களுக்கும் மேலான எம்எல்ஏக்கள் இருந்தபோதிலும் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.

ஆட்சி அதிகாரத்தில் சமபங்கு கேட்டு சிவசேனா கட்சி பிடிவாதம் செய்து வருகிறது. ஆனால், எந்தவிதமான வாக்குறுதியும் அளிக்கவில்லை. முதல்வர் பதவியைத் தாரை வார்க்கும் பேச்சுக்கே இடமில்லை என்று பாஜக திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

ஆனால், சிவசேனா தனது பிடிவாதத்தில் இருந்து இறங்கவில்லை. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் எதிர்க்கட்சி வரிசையில் அமரத் திட்டமிட்டுள்ளதாக தெளிவாகக் கூறிவிட்டதால், சிவசேனாவுக்கு பாஜகவுடன் சேர்வதைத் தவிர வேறு வழியில்லாத நிலை இருக்கிறது. ஆனாலும், சிவசேனா கட்சி பிடிவாதத்துடன் இருந்து வருகிறது.

நாளைக்குள் புதிய ஆட்சி அமைக்காவிட்டால் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலாகும் என்பதால், பாஜக ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்கக் கோரத் தயாராகி வருகிறது. திட்டமிட்டபடி அன்று 11 மணிக்குள் ஆளுநர் பகத்சிங்கை சந்தித்து இருக்க வேண்டிய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான குழு சிவசேனா சம்மதத்துக்காகக் காத்திருக்கிறது.

இந்த சூழலில் பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான நிதின் கட்கரி இன்று நாக்பூரில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தை சந்திக்க உள்ளார். இதற்காக நாக்பூருக்கு கட்கரி வந்திருந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், " மகாராஷ்டிராவில் புதிய ஆட்சி அமைவதற்கும், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்துக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை, இதில் அவரை இழுக்க வேண்டாம்.

மகாராஷ்டிராவில் சிவசேனா துணையுடன் பாஜக தலைமையில் மீண்டும் ஆட்சி அமையும். முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பதவி ஏற்பார். நான் டெல்லி அரசியலில் இருப்பதால், மீண்டும் மாநில அரசுக்குத் திரும்பும் எண்ணம் இல்லை. மாநிலத்தில் புதிய ஆட்சி அமைப்பது தொடர்பாக மிக விரைவில் முடிவு எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே பாஜக சார்பில் மாநிலத் தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், நிதியமைச்சர் சுதிர் முன்கந்திவார் ஆகியோர் புதிய அரசு அமைப்பது தொடர்பாக இன்று காலை ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியைச் சந்திக்கத் திட்டமிட்டு இருந்தனர். ஆனால், சிவசேனாவின் சம்மதத்தோடு சந்திக்க வேண்டும் என்பதால், இந்தச் சந்திப்பு இன்று மாலைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x