Published : 07 Nov 2019 01:05 PM
Last Updated : 07 Nov 2019 01:05 PM

பாஜக அரசால் யார் பலன் பெற்றார்கள்? பிரியங்கா காந்தி சாடல்

புதுடெல்லி

மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசால் யார் பயன் பெற்றார்கள், மக்கள் ஒவ்வொரு நிலையிலும் துன்பத்தை அனுபவித்து வரும்போது ஆட்சியாளர்கள் தங்களுக்காகவே பரபரப்பாகத்தான் இயங்கி வருகிறார்கள் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மத்திய அரசை விமர்சித்துள்ளார்.

இந்தியாவின் பொருளாதாரச் சூழல் மிகவும் மோசமாகி வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. நாட்டின் ஜிடிபி முதல் காலாண்டில் 5.5. சதவீதமாகச் சரிந்துள்ளது. ஆட்டோமொபைல் துறை விற்பனை தொடர்ந்து 11 மாதங்களாகச் சரிவை நோக்கி வருகிறது. முக்கிய 8 துறைகளின் உற்பத்தி வீழ்ச்சி அடைந்து வருகிறது. ஆனாலும் மத்திய அரசு பொருளாதார மந்தநிலையை உணர மறுக்கிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது.

இதுதொடர்பாக நேற்று பிரியங்கா காந்தி ட்விட்டரில் பிரதமர் மோடியை விமர்சித்திருந்தார். அதில், ''வெளிநாடுகளில் நீங்கள் பயணம் செய்யும்போதெல்லாம், 'அனைத்தும் நன்றாக இருக்கிறது' (ஆல் இஸ் வெல்) என்று சொல்வதால் மட்டும் இந்தியாவில் ஒன்றும் சரியாகிவிடாது.

நடப்பு நிதியாண்டின் எந்தக் காலாண்டிலும் வேலைவாய்ப்பு உருவாக்கம் அதிகரிக்கவில்லை. புதிய வேலைவாய்ப்பு உருவாகவில்லை. மிகவும் மதிப்புமிக்க நிறுவனங்கள் கூட ஊழியர்களை வேலையில் இருந்து அனுப்புகின்றன. அனைத்தும் நன்றாக இருக்கிறது என்று சொன்னவர்கள் எல்லாம் இப்போது அமைதியாக இருக்கிறார்கள். அது ஏன்?'' என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில் பிரியங்கா காந்தி ட்விட்டரில் இன்றும் மத்திய அரசை கடுமையாகச் சாடியுள்ளார்.

அவரின் பதிவில், "நாட்டின் பொருளாதாரம் மோசமாக இருக்கிறது. சேவைத் துறை வீழ்ச்சி அடைந்திருக்கிறது. வேலைவாய்ப்பு அளவு குறைந்து வருகிறது. மக்கள் ஒவ்வொரு நிலையிலும் துன்பப்பட்டு வரும் நிலையில் ஆட்சியாளர்கள் தங்களுக்காகப் பரபரப்பாக இயங்கி வருகிறார்கள்.

பாஜக அரசால் யார் பலன்பெற்றார்கள் என்று ஒவ்வொருவரும் கேள்வி கேட்க வேண்டும். அமெரிக்காவில் நடந்த ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். ஆனால், அமெரிக்காவில் வேலைக்குச் செல்ல ஹெச்-1பி விசாவுக்காக காத்திருக்கும் இந்தியர்கள் விண்ணப்பத்தை நிராகரிக்கும் அளவை அமெரிக்கா அதிகரித்துள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x