Published : 07 Nov 2019 11:32 AM
Last Updated : 07 Nov 2019 11:32 AM

கோவை சிறுமி பாலியல் படுகொலை வழக்கு: தூக்கு தண்டனை உறுதி; மறு சீராய்வு மனுவைத் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி

கோவையில் கடந்த 2010- ம் ஆண்டு சிறுமி மற்றும் அவரது தம்பி கடத்தி, படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் இன்று மீண்டும் உறுதி செய்தது. தீர்ப்பை மறு சீராய்வு செய்யக்கோரி குற்றவாளி தரப்பில் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்தது.

கடந்த 2010-ம் ஆண்டு கோவையில் தனியார் பள்ளி ஒன்றில் படித்து வந்த சிறுமியும், அவரது தம்பியும் வாடகை கார் ஓட்டுநர் மோகன்ராஜ் மற்றும் கூட்டாளி மனோகரன் ஆகியோரால் கடத்திப் படுகொலை செய்யப்பட்டனர். இரு குழந்தைகளின் உடல்கள் பொள்ளாச்சி அருகே கண்டெடுக்கப்பட்டது.

தமிழகத்தையே உலுக்கிய இந்த வழக்கில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலையானது உறுதி செய்யப்பட்டது. கொலையாளிகள் மோகன்ராஜும், மனோகரும் சிறுமியையும் அவரது தம்பியையும் கடத்திச் சென்றனர். சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யும்போது சிறுவன் கூச்சலிட்டதால் கொன்றனர்.

பின்னர் சிறுமியையும் கொன்றனர். இதில் மோகன்ராஜும் மனோகரும் கைது செய்யப்பட்டனர். விசாரணைக்கு அழைத்துச் செல்லும் வழியில் போலீஸாரைத் தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற மோகன்ராஜ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த வழக்கில் கோவை மகளிர் நீதிமன்றம் 2012-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி மற்றொரு குற்றவாளியான மனோகரனுக்கு தூக்கு தண்டனை விதித்தது. அந்தத் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனோகரன் மேல்முறையீடு செய்தார். ஆனால் உயர் நீதிமன்றம் மனோகரனின் தண்டனையை கடந்த 2014-ல் உறுதி செய்தது. அதை எதிர்த்து மனோகரன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் மனோகரனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் நீதிபதிகள்பாலி நாரிமன், சூரியகாந்த் ஆகியோர் குற்றவாளி மனோகரனுக்குத் தூக்கு தண்டனையை உறுதி செய்தனர். அதேசமயம் மற்றொரு நீதிபதியான சஞ்சய் கண்ணா மாற்றுக் கருத்து தெரிவித்து இருந்தார். பெரும்பான்மை நீதிபதிகள் தீர்ப்பின்படி மனோகரனுக்கு தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

இந்நிலையில் தனக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை மறு பரிசீலனை செய்யக்கோரி மனோகரன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஒரு நீதிபதி மாறுபட்ட கருத்த தெரிவித்து இருந்ததால் அதனடிப்படையில் தீர்ப்பை மறு சீராய்வு செய்ய வேண்டும் எனக் கோரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் பெரும்பான்மை நீதிபதிகளின் முடிவுப்படியே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதால் இதனை மறு சீராய்வு செய்ய வேண்டிய அவசியம் இல்லை எனவும், ஏற்கெனவே வழங்கப்பட்ட தூக்கு தண்டனை உறுதி செய்யப்படுவதாகவும் தெரிவித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x