Published : 07 Nov 2019 11:31 AM
Last Updated : 07 Nov 2019 11:31 AM

முரண்டு பிடிக்கும் சிவசேனா: மோகன் பாகவத்துடன் நிதின் கட்கரி சந்திப்பு 

நாக்பூர்

மகாராஷ்டிராவில் புதிய ஆட்சி அமைப்பதில் சிவசேனாவின் பிடிவாதத்தால் இழுபறி தொடர்ந்து வரும் நிலையில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத்தை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இன்று சந்திக்க உள்ளார் என்று அவரின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிவசேனா-பாஜக கூட்டணிக்கு 145 இடங்களுக்கும் மோலான எம்எல்ஏக்கள் இருந்த போதிலும் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. ஆட்சி அதிகாரத்தில் சமபங்கு கேட்டு சிவசேனா கட்சி பிடிவாதம் செய்து வருகிறது. ஆனால், எந்தவிதமான வாக்குறுதியும் அளிக்கவில்லை. முதல்வர் பதவியைத் தாரை வார்க்கும் பேச்சுக்கே இடமில்லை என்று பாஜக திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இதனால் இரு கட்சிகளும் அடுத்ததாக புதிய ஆட்சி அமைப்பது தொடர்பாக இன்னும் அதிகாரபூர்வமாக பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை. ஆனால், சட்டப்பேரவையின் பதவிக் காலம் நாளையுடன் முடிவதால் இன்றுக்குள் பாஜக சார்பில் முக்கிய முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

அதேசமயம், தங்களுக்கு 175 எம்எல்ஏக்கள் ஆதரவு இருக்கிறது என்று சிவசேனா கட்சி தொடர்ந்து பேசி வந்தது. ஆனால், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தனது நிலைப்பாட்டை நேற்று தெளிவாகக் கூறிவிட்டார். சிவசேனாவுக்கு எந்தவிதத்திலும் ஆதரவு அளிக்கமாட்டோம். மாநிலத்தில் சிவசேனா, பாஜக ஆட்சி அமைக்கவே மக்கள் வாக்களித்துள்ளார்கள். விரைவில் இரு கட்சிகளும் சேர்ந்து ஆட்சி அமைத்து, குடியரசுத் தலைவர் ஆட்சி வருவதைத் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதனால், சிவசேனாவுக்கு தேசியவாத காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் என்ற நம்பிக்கையும் தகர்ந்தது. காங்கிரஸ் கட்சியும் ஆதரவு அளிக்கப் போவதில்லை. இதனால், மகாராஷ்டிரா அரசியல் களத்தில் 56 எம்எல்ஏக்களுடன் தனித்து விடப்பட்ட நிலையில் சிவசேனா இருந்து வருகிறது.

இதனால் சிவசேனாவுக்கு, பாஜகவுடன் இணைந்து ஆட்சியில் பங்கெடுப்பதைத் தவிர எந்தவிதமான வாய்ப்பும் இல்லை. ஆனாலும், சிவசேனா கட்சி சார்பில், தங்களுக்கு முதல்வர் பதவி வேண்டும் என்ற கோரிக்கையை வலுவாகப் பிடித்து வருகின்றனர்.

இந்த சூழலில் மகாராஷ்டிராவில் அடுத்ததாக பாஜக சார்பில் ஆட்சி அமையுமா அல்லது சிவசேனா சார்பில் ஆட்சி அமையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இக்கட்டான நிலையில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தை இன்று மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான நிதின் கட்கரி சந்திக்க உள்ளார்.

மகாராஷ்டிராவில் நிலவும் அரசியல் குழப்பம், சூழல் குறித்து இருவரும் ஆலோசிப்பார்கள். பாஜக - சிவசேனா இடையே ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் குறித்துப் பேசுவார்கள் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மகாராஷ்டிரா அரசியல் வட்டாரத்தில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் வல்லவர் என்ற நற்பெயரை எடுத்துள்ளவர். பாஜக மட்டுமல்லாது சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் என அனைத்துக் கட்சிகள் தரப்பிலும் நன்கு மதிக்கப்படக் கூடியவர். ஆர்எஸ்எஸ் அமைப்பிலும் கட்கரிக்கு நற்பெயர் உண்டு என்பதால் அவர் இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளார்.

மேலும், நிதின் கட்கரி தலையிட்டுள்ளதால், முதல்வர் பதவியில் தொடர்ந்து பிடிவாதமாக இருக்கும் தேவேந்திர பட்னாவிஸின் பிடியை சற்று தளர்த்துமாறு வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிதின் கட்கரி, மோகன் பாகவத்தைச் சந்திக்கும் சூழலில் பாஜக சார்பில் குழுவினர், ஆளுநர் கோஷ்யாரியைச் சந்தித்து ஆட்சி அமைக்கவும் கோர உள்ளனர். இதனால், அடுத்தகட்ட நகர்வுகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x