

புதுடெல்லி
அயோத்தி நில விவகார வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாக இருக்கும் நிலையில், அது தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தவிர்க்க வேண்டும். சமூகத்தில் ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டும் என்று அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை கூறியுள்ளார்.
அயோத்தி நில விவகார வழக்கு தொடர்பாக நேற்று அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அறிவுரையை பிரதமர் மோடி வழங்கினார். அயோத்தியில் ராமஜென்மபூமி-பாபர் மசூதி தொடர்பான சர்ச்சைக்குரிய நில வழக்கில் வரும் 17-ம் தேதிக்குள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தீர்ப்பு வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி அமைச்சர்களை அழைத்து, பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
அப்போது, அமைச்சர்களிடம், "அயோத்தி விவகாரத்தில் அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவிக்காமல் தவிர்த்து சமூகத்தில் ஒற்றுமையும், நல்லிணக்கமும் நிலவுவதைப் பாதுகாக்க வேண்டும். அயோத்தி விவகாரத்தில் வரும் தீர்ப்பு எந்தத் தரப்பினருக்கு வெற்றி, தோல்வி என்ற கோணத்தில் பார்க்கக் கூடாது" என்று அறிவுரை வழங்கியதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் கடந்த மாதம் 27-ம் தேதி பேசிய பிரதமர் மோடி, "கடந்த 2010-ம் ஆண்டு அயோத்தி வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியபோது, அரசியல் கட்சிகள், அனைத்து சமூகத்தினர், அரசு ஆகியவை அமைதி காத்து ஒற்றுமையுடன் இருந்து உதாரணமாக இருந்தார்கள்" என்று தெரிவித்திருந்தார்.
மேலும், பாஜகவும் தனது தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், செய்தித்தொடர்பாளர்களுக்கும் அயோத்தி விவகாரம், ராமர் கோயில் தொடர்பாக எந்தவிதமான சர்ச்சைக்குரிய கருத்துகளையும், உணர்ச்சிகரமான கருத்துகளையும் தெரிவிக்கக் கூடாது என்று உத்தரவிட்டிருந்தது. அதிலும் எம்.பி.க்கள் தங்கள் தொகுதிகளுக்குச் செல்லும்போது மிகுந்த கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேபோல, ஆர்எஸ்எஸ் அமைப்பும் தனது தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் ராமர் கோயில், அயோத்தி வழக்கு தொடர்பாக எந்தவிதமான உணர்ச்சிகரமான, ஆத்திரத்தைத் தூண்டும் வகையிலான, சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவிக்கக் கூடாது என்று அறிவுரை வழங்கியிருந்தது. மேலும், தீர்ப்பு சாதகமாக வந்தால் எந்தவிதமான கொண்டாட்டங்களும், ஊர்வலமும் இல்லாமல் அமைதி காக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தது.
பிடிஐ