57 ஆண்டுகளாக மலையைக் குடைந்து 40 கி.மீ. சாலை அமைத்து சாதித்த மகாராஷ்டிராவின் ‘மலை மனிதர்’

57 ஆண்டுகளாக மலையைக் குடைந்து 40 கி.மீ. சாலை அமைத்து சாதித்த மகாராஷ்டிராவின் ‘மலை மனிதர்’
Updated on
2 min read

மகாராஷ்டிராவில் அகமது நகர் மாவட்டத்தில் சண்டோஷா மலைத்தொடரில் ஏழு மலைகளைக் குடைந்து 40.கி.மீ தொலைவுக்கு ஒரு சாலை அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்தச் சாலையை ஓர் அரசாங்கமோ எந்தவொரு அமைப்போ ஏற்படுத்தவில்லை. தனியொரு மனிதரின் 57 ஆண்டு கால முயற்சியில் இது சாத்தியமாகியிருக்கிறது.

பாப்கர் குருஜி. அப்படித்தான் ராஜாராம் பாப்கரை அந்த கிராம மக்கள் அன்போடு அழைக்கிறார்கள். தற்போது 84 வயதாகும் பாப்கர் வெள்ளை நிற சட்டையும், பைஜாமாவும், காந்தி குல்லாயும் அணிந்து எளிமையாக இருக்கிறார். கடினமான ஏழு மலைகளை உடைக்கும் வலிமையைக் கொண்டிருந்தது இந்த எளிமையான உருவம்தான்.

பாப்கர் ஏழாவது வரை படித்திருக்கிறார். கொலேகான் என்ற கிராமத்தில் உள்ள ஜில்லா பரிஷத் பள்ளியில் 1957 முதல் 1991 வரை ஆசிரியராக பணி புரிந்துள்ளார்.

குண்டேகான் கிராமத்திலிருந்து தீயல்கான் வழியாக கொலோகானுக்கு வர வேண்டுமெனில் 29 கி.மீ. சுற்றிவர வேண்டும். குண்டேகான் கிராமத்தினர் அருகிலுள்ள கிராமங்களைச் சென்றடைய மிகுந்த சிரமம் அடைந்தனர்.

அதற்காக, 700 மீட்டர் உயர முடைய மலையைக் குடைந்து பாதை அமைத்துத் தரும்படி சுதந்திர இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தனர் கிராம மக்கள். அரசாங்கம் வழக்கம்போல் மக்களின் கோரிக்கையைக் கண்டுகொள்ளவில்லை. வெளியிலிருந்து உதவி கிடைக்கவில்லை. எனவே, தனி நபராக தனக்குக் கிடைத்த சம்பளத்தில் பாதியை சாலை அமைக்க பயன்படுத்தினார் பாப்கர்.

சொந்தப் பணத்தில் கூலி

தனக்கு உதவி புரிந்தவர்களுக்கு தன் சொந்தப் பணத்திலிருந்து கூலி கொடுத்தார் அவர். மொத்தம் 57 ஆண்டுகள் உழைப்பில், 7 மலைகளைக் குடைந்து 7 சாலைகள் அமைக்கப்பட்டன. 1997-ம் ஆண்டு கற்சாலைகள் அமைக்கும் பணி நிறைவடைந்தது.

மொத்தம் 40 கி.மீ. தொலைவுக்கு அந்தப் பாதை அமைக்கப்பட்டிருக்கிறது. அவரது கிராமத்திலிருந்து கொலேகானுக்கு இன்று 10. கி.மீ. தொலைவுக்குள் சென்றடைய முடியும்.

“சுதந்திரத்தின்போது குண்டே கானில் இருந்து பக்கத்து கிராமத்துக்கு செல்ல ஒற்றையடிப்பாதை கூட இல்லை. அரசு அதிகாரிகளிடம் கேட்டும் பயனில்லை. எனது ஊதியத்திலிருந்து பாதியை எடுத்து கூலி கொடுத்தேன். அரசாங்கம் ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை” என நினைவுகூர்ந்தார் பாப்கர்.

“1968-ல் சைக்கிள் கூட இந்த வழியாக செல்ல முடியாது. இப்போது, பெரிய பெரிய வாகனங்கள் பறக்கின்றன” என்கிறார் குண்டேகான் கிராமவாசி ஒருவர்.

ஓய்வு பெற்ற பின் கிடைத்த நிதி, ஓய்வூதியம் ஆகியவற்றையும் சாலை அமைப்பதற்காக பாப்கர் செலவிட்டுள்ளார். மண்வெட்டி போன்றவற்றை மட்டுமின்றி, கனரக வாகனங்களையும் வாடகைக்கு எடுத்து சாலை அமைக்கும் பணியில் ஈடுபடுத்தியுள்ளார் பாப்கர்.

மலை மனிதன்

தன் அன்புக்குரிய மனைவிக்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காததால் அவர் உயிரிழந்ததைப் போன்று மற்றவர்களுக்கு நேரக் கூடாது என்பதற்காக பிஹாரைச் சேர்ந்த தஸ்ரத் மாஞ்சி தனி நபராகப் போராடி மலையைக் குடைந்து சாலை அமைத்தார்.மாஞ்சியின் புகழ் இன்று சினிமாவாக வெளிவந்துள்ளது. அவரைப் போன்றே தனி நபராகப் போராடி சாலை அமைத்த பாப்கரை, மகாராஷ்டிராவின் ‘மலை மனிதன்’ என அப்பகுதி மக்கள் கொண்டாடுகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in