

இரா.வினோத்
பெங்களூரு
கர்நாடக முதல்வா் எடியூரப்பா பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய ஆடியோ வெளியானதன் எதிரொலியாக தற்போது அவரது வீடு மற்றும் அலுவலகத்திற்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் ஹூப்பள்ளியில் நடந்த பாஜக உயா்மட்டக் குழுக்கூட்டத்தில் பேசிய எடியூரப்பா, ''தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 காங்கிரஸ்,மஜத எம்எல்ஏக்கள் அமித் ஷாவின் கண்காணிப்பில் இருந்தனர். அவரது வழிகாட்டுதல்படியே 17 பேரும் நடந்துகொண்டதால் தற்போது பாஜக ஆட்சி அமைந்துள்ளது'' என குறிப்பிட்டார். இந்த பேச்சின் ஆடியோ ஊடகங்களில் வெளியாகி கர்நாடக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள தகுதி நீக்க எம்எல்ஏக்கள் மீதான வழக்கில் ஆடியோவை சாட்சியமாக தாக்கல் செய்துள்ளது. இதனால் எடியூரப்பாவுக்கும், பாஜகவுக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கர்நாடக பாஜக தலைவர் நளின் குமார்கட்டீல், நிர்வாகிகள் கூட்டத்தில் எடியூரப்பா பேசிய வீடியோவை யார் படம்பிடித்து, வெளியிட்டது என்பது குறித்து விசாரிக்க விசாரணை குழு அமைத்துள்ளார்.
இதனிடையே, பெங்களூருவில் உள்ள முதல்வர் எடியூரப்பாவின் கிருஷ்ணா, காவிரி மற்றும் டாலர்ஸ் காலனியில் உள்ள வீடுகளில் செல்போன் கொண்டு செல்ல பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதேபோல கர்நாடக தலைமை செயலகத்தில் உள்ள முதல்வர் அலுவலகத்திற்கு செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எடியூரப்பாவின் உத்தரவின் பேரில்இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.