

ஜெய்ப்பூர்
ராஜஸ்தானில் நடைபெற்ற கால்நடை கண்காட்சிக்கு சுமார் 1,300 கிலோ எடையுடன் ஆஜானுபாகுவாக வருகை தந்த ‘பீமா' என்ற ஆண் எருமை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
புஷ்கரில் மிகவும் பிரசித்திப் பெற்ற கால்நடை கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில், மிக அரியவகை இனங்களைச் சேர்ந்த ஒட்டகங்கள், ஆடு - மாடு போன்ற கால்நடைகள் அழைத்து வரப்பட்டிருந்தன.
ஒவ்வொரு விலங்கும் ஒவ்வொரு விதமாக பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருந்த நிலையில், அங்கு வந்து இறங்கியது ‘பீமா' எருமை. மிகவும் வீரியமிக்க இனமான முர்ரா வகையைச் சேர்ந்த இந்த பீமா எருமை, ஆறடி உயரமும், சுமார் 1,300 கிலோ எடையும் கொண்டதாகும்.
ஆஜானுபாகுவாக நின்று கொண்டிருந்த இந்த எருமையை கண்டவுடன், பார்வையாளர்கள் அனைவரும் அதனை சூழ்ந்து கொண்டு புகைப்படம் எடுத்தனர். தொழிலதிபர் ஒருவர் அந்த எருமையை ரூ.14 கோடிக்கு விலை பேசினார். எனினும், அதன் உரிமையாளரான ஜவஹர் லால் ஜாங்கிட், பீமாவை விற்க மறுத்துவிட்டார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:இந்த எருமையை பராமரிக்க மாதம் ஒன்றுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் செலவாகிறது. நாள்தோறும் ஒரு கிலோ நெய், அரை கிலோ வெண்ணெய், 200 கிராம் தேன், 25 லிட்டர் பால், 1 கிலோபாதாம் - முந்திரி உள்ளிட்டவற்றை இதற்கு உணவாக அளிக்கிறோம். இவ்வாறு ஜாங்கிட் கூறினார்.