Published : 07 Nov 2019 08:11 AM
Last Updated : 07 Nov 2019 08:11 AM

இம்ரான் கானுக்கு எச்சரிக்கை மணி

டாக்டர் ஸ்ரீதர் கிருஷ்ணசுவாமி

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை, தீவிரவாத அமைப்புகளின் நிதி ஆதாரங்களைக் கண்காணிக்கும் சர்வதேச அமைப்பான ‘நிதி நடவடிக்கை செயல் குழு' (எப்.ஏ.டி.எப்.), பிரான்ஸ் தலைநகர் பாரிஸை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. தீவிரவாத அமைப்புகளுக்கான நிதியுதவிகளைத் தடுக்க பாகிஸ்தான் அரசுக்கு, எப்.ஏ.டி.எப். 27 நிபந்தனைகளை விதித்தது. இதில் 5 நிபந்தனைகளை மட்டுமே அந்த நாடு பூர்த்தி செய்துள்ளது. இதர நிபந்தனைகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன.

இதன் காரணமாக வடகொரியா, ஈரானுடன் சேர்த்து பாகிஸ்தானையும் கருப்பு பட்டியலில் சேர்க்க எப்.ஏ.டி.எப். கடந்த மாதம் தீவிரமாக ஆலோசித்தது. நெருங்கிய நட்பு நாடான சீனா, புதிய கூட்டாளிகள் துருக்கி, மலேசியாவின் ஆதரவுடன் கருப்பு பட்டியல் ஆபத்தில் இருந்து பாகிஸ்தான் தப்பித்துக்கொண்டது. எனினும் கிரே பட்டியலிலேயே பாகிஸ்தான் தொடர்ந்து நீடிக்கும் என்று எப்.ஏ.டி.எப். அறிவித்துள்ளது.

தண்டனையில் இருந்து தப்பித்துவிட்டோம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானால் மார்தட்ட முடியாது. அவரது தலைக்கு மேல் இன்னமும் கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது. தீவிரவாத அமைப்புகளுக்கு கிடைக்கும் நிதியுதவியை வரும் பிப்ரவரிக்குள் தடுத்து நிறுத்த வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு எப்.ஏ.டி.எப். கெடு விதித்துள்ளது. குறிப்பாக சர்வதேச தீவிரவாதிகள் ஹபீஸ் சயீது, மசூத் அசார் மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இல்லையெனில் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று எப்.ஏ.டி.எப். எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

தீவிரவாதிகள் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு கருணை காட்ட முடியாது என்று அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் தெளிவுபடுத்திவிட்டன. பாகிஸ்தானின் பொருளாதாரம் பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் வேளையில், அந்த நாடு எப்.ஏ.டி.எப். அமைப்பின் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டால் உலக வங்கி, சர்வதேச செலாவணி நிதியம், ஐரோப்பிய ஒன்றியம் உட்பட எந்தவொரு சர்வதேச அமைப்பிடம் இருந்தும் நிதியுதவி பெற முடியாது.

கொடுத்த கடனை திருப்பிக் கொடுக்க முடியாத நிலையில் உள்ள பாகிஸ்தானுக்கு நிதி வழங்குவது குறித்து சீனா கூட யோசிக்கக்கூடும். பாகிஸ்தானுக்கு ரூ.42,314 கோடி கடன் வழங்க சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எப்) ஒப்புக் கொண்டிருக்கிறது. ஆனால் தீவிரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இந்த கடன் வழங்கப்படும் என்று ஐ.எம்.எப். அமைப்பும் நிபந்தனை விதித்துள்ளது.

பாகிஸ்தான் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு பிரதமர் இம்ரான் கான் மீது மட்டுமே குறை சொல்ல முடியாது. ஆனால் தீவிரவாதத்துக்கு எதிராககடுமையான சட்டங்களை இயற்றாதது, உலக நாடுகளுடன் ஒன்றிணைந்து செயல்படாதது ஆகிய தவறுகளை அவர் இழைத்திருப்பதை யாராலும் மறுக்க முடியாது. ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்க அண்மையில் அமெரிக்கா சென்ற இம்ரான் கான், “தீவிரவாதத்துக்கு எதிரான போரில் அமெரிக்காவுடன் பாகிஸ்தான் இணைந்தது மாபெரும் தவறு” என்று நிருபர்கள் முன்னிலையில் வருந்தினார்.

“கடந்த 1980-களில் ஆப்கானிஸ்தானை, சோவியத் யூனியன் ஆக்கிரமித்தது. அப்போது சோவியத்துக்கு எதிராகப் போரிட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த போராளிகளுக்கு பாகிஸ்தான் பயிற்சி அளித்தது. இதற்கு அமெரிக்கா பெருமளவில் உதவி செய்தது. பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு, உலகம் முழுவதும் இருந்து முஸ்லிம் போராளிகளை ஒன்று திரட்டி போரில் ஈடுபடுத்தியது. சோவியத் யூனியனுக்கு எதிராகப் போரிட்ட அந்த போராளிகள், கதாநாயகர்களாக வர்ணிக்கப்பட்டனர்.

ஆனால் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா கால் பதித்ததும் அவர்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை அகற்ற அமெரிக்காவுடன் பாகிஸ்தான் கைகோத்திருக்கவே கூடாது” என்று இம்ரான் கான் நீண்ட விளக்கம் அளித்தார். கடந்த 2001 செப்டம்பர் 11-ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இரட்டை கோபுரம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட பிறகு அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், தீவிரவாதத்துக்கு எதிரான போரை தொடங்கினார்.

அப்போது என்ன நடந்திருக்கும் என்பதை இம்ரான் கான் தனக்குத் தானே கேள்வி எழுப்பி பார்க்க வேண்டும். “நீங்கள் (பாகிஸ்தான்) எங்கள் பக்கமா, எதிரிகள் பக்கமா” என்ற கேள்வியை அமெரிக்கா முன்வைத்தது. இதுகுறித்து பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் கடந்த 2006-ம் ஆண்டு அமெரிக்க பயணத்தில் கூறும்போது, “அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் முழுஒத்துழைப்பு அளிக்கும் என்றே நாங்கள் உறுதியளித்தோம். இல்லையெனில் குண்டுவீச்சு தாக்குதல்களால் பாகிஸ்தான் கற்காலத்துக்கே தள்ளப்பட்டிருக்கும்” என்று விளக்கமளித்தார்.

இதுகுறித்து அன்றைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கூறும்போது “ஆப்கானிஸ்தான் மீது போர் தொடுத்த நேரத்தில் அமெரிக்க வெளியுறவு துணைச்செயலாளர் அர்மிட்டேஜ் பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான சொற்களை உதிர்த்திருக்கலாம். ஆனால் பாகிஸ்தான் மீது குண்டு வீசுவோம், ராணுவ நடவடிக்கை எடுப்போம் என்று ஒருபோதும் மிரட்டவில்லை” என்று பதிலளித்தார்.

அன்றைய ஐஎஸ்ஐ இயக்குநர் முகமது அகமதுவுக்கும் அமெரிக்க வெளியுறவு துணைச் செயலாளர் அர்மிட்டேஜ்ஜுக்கும் இடையிலான தொலைபேசிஉரையாடலை அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ வட்டாரங்கள் வெளியிட்டன. அதில், அர்மிட்டேஜ் கோபத்தில் கொந்தளிப்பதை தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். அந்த நேரத்தில் 7 முக்கிய நிபந்தனைகளை அமெரிக்கா விதித்தது. அவற்றை அன்றைய பாகிஸ்தான் அதிபர் முஷாரப் அப்படியே ஏற்றுக் கொண்டார்.

“அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பிறகும் பாகிஸ்தான் திருந்தவில்லை. ஆப்கானிஸ்தானில் நாச வேலைகளில் ஈடுபட்டு வரும் தலிபான்களோடு இன்றளவும் ஒட்டி உறவாடும் ஒரே நாடு பாகிஸ்தான் மட்டுமே” என்று அமெரிக்க அரசியல் தலைவர்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டி வருகின்றனர். தீவிரவாதத்தை ஒடுக்க அமெரிக்க முன்னாள் அதிபர்கள் ஜார்ஜ் புஷ், பராக் ஒபாமா ஆட்சிக் காலத்தில் பாகிஸ்தானுக்கு கோடிக்கணக்கில் பணம் வாரியிறைக்கப்பட்டது.

ஆனால் அவை விழலுக்கு இறைத்த நீர் போன்று எவ்வித பயனும் இல்லாமல் போய்விட்டது. இரட்டை கோபுர தாக்குதல் தீவிரவாதிகளில் காலித் ஷேக் முகமது பாகிஸ்தானை சேர்ந்தவர். இது அமெரிக்காவுக்கே பேரதிர்ச்சியை அளித்தது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அகற்றப்பட்ட பிறகு ஆயிரக்கணக்கான தீவிரவாதிகள் பாகிஸ்தானில் புகலிடம் அடைந்தனர். அல்-காய்தா தலைவர் ஒசாமா பின் லேடன், பாகிஸ்தானின் அபோடாபாத் நகரில் ஐ.எஸ்.ஐ. தலைமை அலுவலகத்துக்கு மிக அருகில் தங்கியிருந்தார். கடந்த 2011 மே 2-ம் தேதி அமெரிக்க கடற்படை வீரர்கள், அவரை சுட்டுக் கொன்றனர்.

அல்-காய்தாவின் இப்போதைய தலைவர் அய்மான் அல்-ஜவாஹிரி உள்ளிட்ட ஏராளமான சர்வதேச தீவிரவாதிகள் பாகிஸ்தானில் அடைக்கலம் புகுந்துள்ளனர். அன்றும் இன்றும் தீவிரவாதிகளின் பாதுகாப்பு அரணாக பாகிஸ்தான் செயல்படுகிறது. தீவிரவாத தடுப்பு நடவடிக்கைக்காக பாகிஸ்தானுக்கு வாரி வழங்கப்பட்ட நிதி, இந்தியாவுக்கு எதிரான நாசவேலைகளுக்காக திருப்பி விடப்பட்டிருப்பதை அமெரிக்கா கண்டுபிடித்து, ஒட்டுமொத்த நிதியுதவியையும் நிறுத்திவிட்டது. அமெரிக்க டாலர் வரத்து நின்றதால் பாகிஸ்தான் இப்போது பரிதவித்து வருகிறது. பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளை குறிவைத்து ஆளில்லா விமானங்கள் மூலம் அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பாகிஸ்தான் அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு 2 முக்கிய விஷயங்களை அமெரிக்கா தெளிவாக சுட்டிக் காட்டியுள்ளது. முதலாவது, தீவிரவாதிகள் பதுங்கியுள்ள பகுதிகள் பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்தாலும் அந்த நாட்டின் கட்டுப்பாட்டில் இல்லை. இரண்டாவது, அமெரிக்க உளவுத் துறை தகவல் அளித்த பிறகும் தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் படைகள் நடவடிக்கை எடுப்பது இல்லை. இதன் காரணமாகவே கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க ராணுவமும் சிஐஏ அமைப்பும் பாகிஸ்தான் எல்லைக்குள் ஆளில்லா விமானங்கள் மூலமும், ஏவுகணைகள் மூலமும் தீவிரவாதிகளை வேட்டையாடி வருகின்றன. இம்ரான் கான் தனது குரலை எவ்வளவு உயர்த்தினாலும் அமெரிக்கா தனது தீவிரவாத வேட்டையை ஒருபோதும் நிறுத்தாது.

தீவிரவாதத்தின் ஊற்றுக்கண்ணாக பாகிஸ்தான் மாறி வருவதை அமெரிக்கா மட்டுமின்றி இதர உலக நாடுகளும் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன. அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் என்ற பாகிஸ்தான் அரசியல் தலைவர்கள் பொறுப்பற்ற வகையில் பேசி வருவது சர்வதேச அரங்கில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு, இம்ரான் கான் ஏதேதோ உளறி வருகிறார்.

இந்தியா மீது அணு ஆயுதப் போர் தொடுப்போம் என்று அவர் பகிரங்கமாக மிரட்டல் விடுத்திருப்பது அந்த நாடு ஆபத்தான அணு ஆயுத நாடு என்பதை உலகுக்கு பறைசாற்றியுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா பனிப்போரின்போதும்கூட இரு நாடுகளின் தலைவர்களும், இம்ரான் கான் போன்று ஆத்திரமூட்டும் வார்த்தைகளை ஒருபோதும் பயன்படுத்தவில்லை.

பாகிஸ்தான் வரலாற்றை ஆய்வு செய்தால் அந்த நாட்டை ராணுவம் அதிக காலம் ஆட்சி செய்திருப்பது தெரியும். எஞ்சிய காலத்தில்தான் மக்கள் ஆட்சி நடைபெற்றுள்ளது. அதுவும் ராணுவம், ஐஎஸ்ஐ ஆசி பெற்ற அரசியல் தலைவர்கள் மட்டுமே ஆட்சி நடத்த அனுமதிக்கப்பட்டனர். அந்த வரிசையில் இப்போது இம்ரான் கானும் இணைந்துள்ளார்.

பொருளாதார வீழ்ச்சியால் பாகிஸ்தான் இருண்ட காலத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறது. ஏழ்மை, வேலைவாய்ப்பின்மை காரணமாக தீவிரவாத இயக்கங்கள் பெருகி வருகின்றன. பொருளாதாரம் தேய்வதும் தீவிரவாதம் வளர்வதும் இம்ரான் கானுக்கு அடிக்கப்படும் எச்சரிக்கை மணியாகும்.

டாக்டர் ஸ்ரீதர் கிருஷ்ணசுவாமி
எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி
கல்லூரியின் இதழியல் துறை பேராசிரியர்
மற்றும் வாஷிங்டனில் பணியாற்றிய பத்திரிகையாளர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x