Published : 06 Nov 2019 05:48 PM
Last Updated : 06 Nov 2019 05:48 PM

கடவுளையும் விட்டுவைக்காக காற்று மாசு: வாரணாசி கோயில்களில் துர்கா, காளி சிலைகளுக்கு சுவாசக் கவசம்

வாரணாசி

தலைநகர் டெல்லியில் மக்களைக் கடுமையாக வாட்டி வரும் காற்று, புகை மாசு கடவுளையும் விட்டு வைக்கவில்லை. வாரணாசியில் கடுமையான காற்று மாசால் கோயில்களில் உள்ள துர்கை, காளி, பாபா சிலைக்கு சுவாசக் கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் தீபாவளிக்குப் பின் காற்று மாசு கடுமையாக அதிகரித்து வருகிறது. அண்டை மாநிலங்களான ஹரியாணா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் விவசாயிகள் வயல்களில் அறுவடை செய்த பின் மீதமிருக்கும் கதிர்களை எரிப்பதால், கடுமையான புகைமூட்டம் டெல்லி வரை வந்து சேர்கிறது. இதுதவிர வாகனங்கள் பெருக்கம், கட்டுமானப் பணிகள், தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகை மாசு ஆகியவற்றால் காற்றின் தரம் குறைந்து வருகிறது.

டெல்லியில் கடந்த வாரம் காற்று தரக்குறியீடு 500 முதல் 600 புள்ளிகள் வரை இருந்ததால், மக்கள் வீட்டை விட்டு தேவையின்றி வெளியே நடமாட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. நவம்பர் 5-தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறையும் விடப்பட்டு இருந்தது. டெல்லியில் இன்னும் காற்று மாசின் தீவிரம் குறையவில்லை.

இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் உள்ள பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் காற்று மாசு 500 புள்ளிகளைத் தொட்டு ஆபத்தான கட்டத்தில் இருந்து வருகிறது. தீபாவளிக்குப் பின் பிஎம் அளவு 2.5 சதவீதமாக இருந்து வருகிறது.

காற்று மாசை சமாளிக்கும் வகையில் வாரணாசிக்கு வரும் பக்தர்கள் முகத்தில் சுவாசக் கவசத்தை அணிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

ஆனால், பக்தர்கள் மட்டுமின்றி வாரணாசியில் உள்ள சில கோயில்களில் கடவுள் சிலைக்கும் காற்று மாசு காரணமாகச் சுவாசக் கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சிகாராவில் உள்ள சிவன், துர்கா, காளி, சாய்பாபா உள்ளிட்ட கடவுள் சிலைகளுக்குக் கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக துர்கா கோயில் தலைமை அர்ச்சகர் ஹரிஸ் மிஸ்ரா கூறுகையில், "வாரணாசி நம்பிக்கைக்குரிய இடம். இங்குள்ள சிலைகள் அனைத்துக்கும் உயிர் இருப்பதாக நம்புகிறோம். அவர்களுக்கு வலி ஏற்படுத்தக்கூடாது என்பதற்காக மகிழ்ச்சியாகவும், வசதியாகவும் வைக்க சில நடவடிக்கை எடுக்கிறோம். வெயில் காலத்தில் சிலைகளுக்குச் சந்தனத்தால் காப்பும், குளிர்காலத்தில் கம்பளி ஆடையும் அணிவிக்கிறோம். தற்போது காற்று மாசில் இருந்து காப்பதற்காக முகத்தில் சுவாசக் கவசம் அணிவிக்கிறோம்.

ஆனால், காளியின் முகத்தில் சுவாசக் கவசம் அணிவிப்பது கடினமானது. காளி ஏற்கெனவே உக்கிரமான தெய்வம். அவருடைய நீளமான நாக்கை சுவாசக் கவசம் முழுமையாக மூடாது. ஆதலால், காளியின் முகத்தை மூடவில்லை. கோயில்களுக்கு வரும் பக்தர்கள் கடவுள்களுக்கு சுவாசக் கவசம் இருப்பதைப் பார்த்து அவர்களும் அணிந்து கொள்கிறார்கள்.

தீபாவளி நேரத்தில் பட்டாசு வெடிப்பதால் மோசமான காற்று வருவதில்லை. பனி மூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. இந்த நேரத்தில் குப்பைகளை எரிப்பதாலும் புகை சூழ்கிறது" என்று தலைமை அர்ச்சகர் ஹரிஸ் மிஸ்ரா தெரிவித்தார்.

ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x