

புனே, பிடிஐ
மழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குச் சேர வேண்டிய காப்பீட்டு தொகையை அளிப்பதில் ‘வேண்டுமென்றே’ தாமதம் செய்ததாகக் குற்றம்சாட்டி புனேவில் உள்ள இஃப்கோ டோகியோ ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்குள் புகுந்த சிவசேனா கட்சியினர் அலுவலகத்தைச் சூறையாடினர்.
புதனன்று காலை 11 மணியளவில் மங்கள்தாஸ் சாலையில் உள்ள இஃப்கோ டோகியோ காப்பீட்டு நிறுவனக் கிளைக்குல் சிவசேனாத் தொண்டர்கள் அதிரடியாகப் புகுந்தனர். பருவமழைக்குப் பிந்தைய காலம் தவறிய மழையினால் பயிர்களை முற்றிலும் இழந்த விவசாயிகளுக்கு உரிய காப்பீட்டுத் தொகையை உடனடியாக செட்டில் செய்க என்று கோஷமிட்டனர்.
மேலும் அலுவலக ஊழியர்கள் வெளியேறக்கூட காத்திருக்காமல் காவிக்கொடியை உயர்த்தி காப்பீட்டு நிறுவனத்தின் பொருட்கள் அனைத்தையும் சூறையாடினர். அலுவலகத்தையே முற்றிலும் சூறையாடினர், அங்குள்ள நாற்காலிகள், மேஜைகள் உள்ளிட்ட பர்னிச்சர்களை தூள் தூளாக்கினர். ஜன்னல் கண்ணாடிகள் ஆங்காங்கே சிதறின. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சமீபமாக சிவசேனாத் தலைவர் உத்தவ் தாக்கரே, விவசாயிகள் காப்பீட்டு தொகையை தாமதமில்லாமல் விவசாயிகளுக்கு அளிக்குமாறு வலியுறுத்தியிருந்தார்.
தாக்குதல் ‘எச்சரிக்கை மணி’:
“ஏற்கெனவே அனைத்து காப்பீட்டு நிறுவனங்களுக்கும், இப்கோ டோகியோ, பஜாஜ் அலையன்ஸ் உட்பட எச்சரிக்கை விடுத்தோம். விவசாயிகளுக்குச் சேர வேண்டிய காப்பீட்டுத் தொகையை தாமதப் படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்திருந்தோம். ஆனால் அவர்கள் காதில் போட்டுக் கொள்ளவில்லை, அதிலும் குறிப்பாக இஃப்கோ டோகியோ நிறுவனம் திமிர்த்தனமாக நடந்து கொண்டது. எனவே அலுவலகத்தில் புகுந்தோம், இதன் மூலம் அவர்கள் விழித்துக் கொள்ள வேண்டும்” என்று சிவசேனா புனே கிளைத் தலைவர் சஞ்சய் மோரே தி இந்து ஆங்கிலம் நாளிதழுக்குத் தெரிவித்துள்ளார்.
மராத்வாதா பகுதியில் வறட்சிக் காலக்கட்டத்திலும் இஃப்கோ டோக்கியோ நிறுவனம் விவசாயிகளுக்கு சேர வேண்டிய காப்பீட்டு உரிமைத் தொகையைக் கொடுக்கவில்லை என்ற புகார்கள் எழுந்தன.
எனவே, “புனேயிலும் சரி மும்பையிலும் சரி காப்பீட்டு நிறுவனங்கள் விவசாயிகள் விவகாரத்தில் அசிரத்தைக் காட்டினால் சிவசேனா தன் பாணியில் ‘போராட்டத்தை’ நடத்தும்.
பயிர்க்காப்பீட்டு நிறுவனங்களை சிவசேனா நெருக்கமாக கண்காணித்து வருகிறது, எனவே காப்பீட்டு நிறுவனங்கள் மேலும் பயிர்க்காப்பீட்டு உரிமைத் தொகையை கொடுக்காமல் காலதாமதம் செய்வது இனி முடியாது என்று முன்னாள் சிவசேனா எம்.எல்.ஏ. மஹாதேவ் பாபரும் எச்சரித்தார்.
இன்னொரு சேனா தலைவரான சூரஜ் லோகாண்டே என்பவர், இப்போதைய தாக்குதல் வெறும் டைட்டில்தான், முழுப்படம் இன்னும் காட்டப்படவில்லை என்றார்.
ஏற்கெனவே ஜூன் மாதத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்ற சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தன் தொண்டர்களிடம் பணம் கொடுக்காத காப்பீட்டு நிறுவனம், வங்கிகளை ‘சரி’ செய்யுமாறு அறிவுறுத்தியிருந்தார்.
ஒரு புறம் பாஜகவுடன் அதிகாரப்பகிர்வில் அதிருப்தி அடைந்து பேரம் பேசி வரும் சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே தான் இப்படிப்பட்ட அதிகாரத்துக்கான நபர் அல்ல விவசாயிகளின் நலன்களில் அக்கறைக் காட்டுபவர் என்பதாகத் தன்னைக் காட்டிக் கொள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்துவதாக மகாராஷ்ட்ரா அரசியல் நிலவரங்களை அவதானிக்கும் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.