பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு 'விஆர்எஸ்' திட்டம்: டிச. 3-ம் தேதி வரை வாய்ப்பு

பிரதிநிதித்துவப்படம்
பிரதிநிதித்துவப்படம்
Updated on
2 min read

புதுடெல்லி

இழப்பில் இயங்கி வரும் பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டம் (விஆர்எஸ்) முறைப்படி வெளியிடப்பட்டுள்ளது. அதன் மண்டலத் தலைமை அதிகாரிகள், திட்டம் பற்றி ஊழியர்களிடம் விரிவாக எடுத்துரைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

தற்போது பிஎஸ்என்எல் அலுவலகத்தில் 1.76 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள், இதில் 1.06 லட்சம் ஊழியர்கள் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள். இத்திட்டத்தைச் செயல்படுத்தினால், 80 சதவீதம் ஊழியர்கள் இந்தத் திட்டத்தைத் தேர்வு செய்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ரூ.14,300 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பிஎஸ்என்எல் வட்டாரத் தலைமை அலுவலகங்களுக்கு விடுக்கப்பட்ட சுற்றறிக்கையில், "மத்திய அரசு மற்றும் மத்திய தொலைத்தொடர்புத் துறை எடுத்துள்ள முடிவின்படி, 2019-ம் ஆண்டு விருப்ப ஓய்வு திட்டம் ஊழியர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் விதிமுறைப்படி விருப்ப ஓய்வு பெறத் தகுதியான ஊழியர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தலாம்.

இத்திட்டத்தின் கீழ் விருப்ப ஓய்வு பெற விரும்பும் ஊழியர்களுக்கான வாய்ப்பு நவம்பர் 4-ம் தேதி முதல் டிசம்பர் 3-ம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் வரும் 2020-ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விஆர்எஸ் திட்டம் குறித்து பிஎஸ்என்எல் ஊழியர்கள் அனைவரும் அறியும் வகையில் விரிவான விளம்பரம், விழிப்புணர்வு, முடிவுகள், திட்டத்தின் பயன்கள் குறித்துக் குறிப்பிட்டுள்ள காலத்துக்குள் தெளிவாக விவரிக்க வேண்டும் என்று மண்டல, வட்டார அளவிலான தலைமை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், ஊழியர்கள் கேட்கும் சந்தேகங்கள், விளக்கங்களை முடிந்தவரை விரிவாக எடுத்துரைத்து, தகுதியான ஊழியர்கள் திட்டத்தைத் தேர்ந்தெடுக்க உதவ வேண்டும். இந்தத் திட்டத்தின் பயன்கள், சிறப்புகள் குறித்து விளம்பரப் பதாகைகள் வைக்க வேண்டும் என்றும் தலைமை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், "பிஎஸ்என்எல், அதிகாரிகளை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சமீபத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது ஊழியர்களுடன் முறைப்படி பேசி விஆர்எஸ் திட்டத்தைச் செயல்படுத்துங்கள், நல்ல பலன் கிடைக்கும். விஆர்எஸ் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தினால் மட்டும் பிஎஸ்என்எல் நிறுவனம் மறுமலர்ச்சி பெறும்" என்று அறிவுறுத்தியுள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டது.

இதன்படி 53.5 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்கள் தங்கள் மீதமுள்ள வேலைநாட்கள் ஊதியத்தில் 125 சதவீதம் பெறுவார்கள். 50 முதல் 53.5 வயதுள்ள ஊழியர்கள் தங்களின் மீதமுள்ள பணிக்காலத்தில் 80 முதல் 100 சதவீதம் பணம் பெறுவார்கள்.

தற்போது 55 வயதுக்கு மேல் உள்ள ஊழியர்கள் விஆர்எஸ் திட்டத்தைத் தேர்வு செய்தால், ஓய்வூதியம் 60 வயது அடைந்த பின்பு தான் தொடங்கும். தற்போது 55 வயது அல்லது அதற்குக் குறைவான வயதுள்ள ஊழியர்கள் விஆர்எஸ் திட்டத்தைத் தேர்வு செய்தால் 6 -வது ஆண்டில் இருந்து அதாவது 2024-25 ஆம் ஆண்டில் இருந்து ஓய்வூதியம் தொடங்கும்.

ஐஏஎன்எஸ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in