

புதுடெல்லி
வாட்ஸ் ஆப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு விசாரிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் முக்கிய பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்ட சிலரின் வாட்ஸ் ஆப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டதாகத் தகவல் வெளியானது.
இஸ்ரேலைச் சேர்ந்த உளவு சாப்ட்வேர் பீகாசஸ் மூலம் இந்த பெயர் வெளியிடப்படாத நிறுவனங்கள் சில இந்தியாவைச் சேர்ந்த முக்கிய பத்திரிகையாளர்கள் , மனித உரிமை ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் ஆகியோரின் வாட்ஸ் ஆப் தகவல்களை உளவு பார்த்ததாக தகவல் வெளியானது.
கலிபோர்னியா பெடரல் நீதிமன்றத்தில் வாட்ஸ் ஆப் நிறுவனம் தொடர்ந்த வழக்கில், இஸ்ரேலைச் சேர்ந்த சைபர் உளவு நிறுவனமான என்எஸ்ஓ 1,400 பேரின் மொபைல் போன் ஹேக் செய்யப்பட்டு அவர்களது வாட்ஸ் ஆப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டதாகவும், தெரிவித்துள்ளது.
கோடிக்கணக்கான இந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்கப்படும், அதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி, மத்திய அரசைக் கடுமையாகச் சாடி வருகிறது.
பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகளை உளவுபார்த்த மத்திய அரசு சிக்கிக்கொண்டது, இதை உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
இதைத்தொடர்ந்து மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் பிரபுல் படேல் ஆகியோரின் மொபைல் போன் ஹேக் செய்யப்பட்டதாக கூறி வாட்ஸ் ஆப் நிறுவனம் மெசேஜ் அனுப்பியதாக தகவல் வெளியானது.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் மொபைல் போன் ஹேக் செய்யப்பட்டது தொடர்பாக வாட்ஸ் ஆப் நிறுவனம் மெசேஜ் அனுப்பியதாக காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலாவும் புகார் கூறினார்.
மொபைல் போன்களை ஹேக் செய்து வாட்ஸ் ஆப் தகவல்களை உளவு பார்த்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என பல்வேறு கட்சித் தலைவர்களும், பல்வேறு துறை சார்ந்தவர்களும் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் வாட்ஸ் ஆப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் தலைமையிலான தகவல் தொழில்நுட்பத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணை நடத்தவுள்ளது.
நாடாளுமன்ற நிலைக்குழுவின் கூட்டம் நவம்பர் 20-ம் தேதி நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் வாட்ஸ் ஆப் தகவல் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
இதுதொடர்பாக சசிதரூர் தனது குழுவில் உள்ள மற்ற எம்.பி.க்களுக்கு தகவல் அனுப்பியுள்ளார். வாட்ஸ் ஆப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் காரணமாக பொதுமக்களிடையே ஒருவித பீதி ஏற்பட்டுள்ளதால் இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணை நடத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.
உள்துறைச் செயலாளர் உட்பட முக்கிய அரசுத்துறை அதிகாரிகளிடம் இருந்து தகவல் பெற்று இந்த குழு விசாரணை நடத்தும் எனத் தெரிகிறது.