

புதுடெல்லி,
கர்தார்பூர் சாஹிப்பிற்கு வருகை தரும் சீக்கிய யாத்ரீகர்களை வரவேற்கும் வகையில் பாகிஸ்தான் அரசு சர்ச்சைக்குரிய வீடியோவை வெளியிட்டுள்ளது. இது சீக்கியர்களை பாகிஸ்தான் வரவேற்பதற்குப் பின்னுள்ள நோக்கம் குறித்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
கர்தார்பூர் சாஹிப்பிற்கு வருகை தரும் சீக்கிய யாத்ரீகர்களை வரவேற்கும் வகையில் பாகிஸ்தான் அரசு வெளியிட்ட வீடியோ பாடல் ஒரு சர்ச்சையை உருவாக்கியுள்ளது. வீடியோ பாடலின் ஒரு பகுதியில் பின்னணியில பிந்தரன்வாலே உட்பட மூன்று காலிஸ்தானிய பிரிவினைவாதத் தலைவர்களின் படங்கள் இடம் பெற்றுள்ளன.
பாகிஸ்தானின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் திங்களன்று வெளியிட்ட இந்த வீடியோவில், ஜர்னைல் சிங் பிந்தரன்வாலே, மேஜர் ஜெனரல் ஷான்பேக் சிங் மற்றும் அம்ரிக் சிங் கல்சா ஆகியோரின் சுவரொட்டிகள் உள்ளன. இவர்கள் அனைவரும் 1984 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமிர்தசரஸ் பொற்கோயிலில் இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் ப்ளூ ஸ்டாரின் போது கொல்லப்பட்டவர்கள்.
சீந்திர மதப் பிரிவான தம்தாமி தக்சலின் தலைவராக பிந்தரன்வாலே இருந்தார். ஷான்பேக் சிங் ஒரு இந்திய ராணுவ ஜெனரலாக இருந்தார். அவர் 1984 ஆம் ஆண்டில் காலிஸ்தானி இயக்கத்தில் சேர்ந்தார். அவர் ஓய்வு பெறுவதற்கு முன்னர் ஊழல் குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்டார். கல்சா, தடைசெய்யப்பட்ட அகில இந்திய சீக்கிய மாணவர் கூட்டமைப்பின் (ஏ.ஐ.எஸ்.எஸ்.டி) தலைவராக இருந்தார்.
முன்னதாக, பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங், ''பஞ்சாபில் சீக்கிய பயங்கரவாதத்தை புதுப்பிக்க கர்தார்பூர் நடைபாதையை பாகிஸ்தான் தவறாகப் பயன்படுத்தக்கூடும்'' என்று கவலை தெரிவித்தார். பல இந்திய புலனாய்வு அமைப்புகள் மற்றும் வல்லுநர்களும் இந்த வழியைத் திறக்கும் பாகிஸ்தானின் நோக்கங்களைச் சந்தேகித்தனர்.
அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட காலிஸ்தானி குழு 'நீதிக்கான சீக்கியர்கள்', பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ.யின் மறைமுக ஆதரவுடன் கர்தார்பூர் பாதையைப் பயன்படுத்துவதன் மூலம் 'வாக்கெடுப்பு 2020' இயக்கத்தை ஊக்குவிக்கக் கூடும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
நவம்பர் 8 கர்தார்பூர் பாதை திறப்பு
கர்தார்பூர் நடைபாதை திறக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு இந்த வீடியோ வெளிவந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 8 ஆம் தேதி இந்தியத் தரப்பில் நடைபாதையைத் திறக்கவுள்ள நிலையில், அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மறுநாள் வழியைத் திறப்பார்.
கர்தார்பூர் சாஹிப் ஆலய நடைபாதையைச் செயல்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் அக்டோபர் 24-ம் தேதி அன்று கையெழுத்திட்டன. குருநானக் தேவின் 550-வது பிறந்த நாளை முன்னிட்டு அந்நடைபாதை திறப்பு விழாவுக்கு வழி வகுத்தது.
கர்தார்பூர் சாஹிப்பைப் பார்வையிட அனுமதி பெற வேண்டிய இந்திய யாத்ரீகர்களின் விசா இல்லாமல் சென்றுவர இந்த நடைபாதை உதவும். இந்தப் பாதை பஞ்சாபின் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நாங்க் ஆலயத்தை பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூர் சாஹிப் குருத்வாராவுடன் இணைக்கிறது.
ஏஎன்ஐ