

மும்பை
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சி ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்கப் போதவில்லை. பொறுப்புள்ள எதிர்க்கட்சியாகவே நாங்கள் செயல்படுவோம் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தேதியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் கைவிரித்துவிட்டதால், சிவசேனா இனிமேல் பாஜகவுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பதைத் தவிர வேறு வழியில்லை.
சிவசேனாவுக்கு பாஜக விட்டுக் கொடுக்கும் பட்சத்தில் ஆட்சியில் சமபங்கு அளித்தால் இரு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைக்க வாய்ப்பு இருக்கிறது. அல்லது பாஜகவுடன் சிவசேனா இணக்கமாகச் சென்று 'வேண்டிய இடங்களைப்' பெற்று ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது.
இவை இரண்டும் நடக்காமல் ஆட்சியில் சமபங்கு கேட்டு சிவசேனா பிடிவாதம் செய்யும் பட்சத்தில் 8-ம் தேதிக்குப் பின் மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலாக வாய்ப்புள்ளது.
மகாராஷ்டிராவில் 28 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நடந்த தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாஜகவுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கு 56 இடங்களும் கிடைத்தன. ஆட்சி அமைக்க 146 இடங்கள் தேவை. பாஜக, சிவசேனா கூட்டணிக்கு ஆட்சி அமைக்கப் போதுமான பெரும்பான்மை இடங்கள் இருந்தபோதிலும் கருத்தொற்றுமை இல்லாததால் இழுபறி நீடிக்கிறது.
தேர்தலுக்கு முந்தைய ஒப்பந்தத்தின்படி ஆட்சி அதிகாரத்தில் சமபங்கை சிவசேனா கோரி வருகிறது. ஆனால், தேர்தலுக்கு முன் எந்தவிதமான ஒப்பந்தமும் செய்யவில்லை. அவ்வாறு அதிகாரத்தில் சமபங்கு அளிக்க இயலாது என்று பாஜக திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
வரும் 8-ம் தேதிக்குள் சட்டப்பேரவையின் காலம் முடிவதால் அதற்குள் புதிய ஆட்சி அமைக்க வேண்டும். இல்லாவிட்டால், ஆளுநர் முடிவு எடுக்க வேண்டிய நிலை ஏற்படும். இந்த சூழலில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தை நேற்று இரவு முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் சந்தித்துப் பேசியுள்ளார்.
இதற்கிடையே சிவேசனா தனது பிடியில் உறுதியாக இருந்து வருகிறது. மகாராஷ்டிரா மக்கள் சிவசேனாவில் இருந்து முதல்வராக ஒருவர் வருவதைத்தான் விரும்புகிறார்கள் என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் இன்று கூறியிருப்பது, பாஜக- சிவசேனா இடையிலான சிக்கலை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.
இந்த சூழலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் சிவசேனா ஆட்சி அமைக்குமா என்ற ஊகமும் வலுத்துள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் மாநில அரசியல் தொடர்பாக பல கட்ட ஆலோசனைகளை நடத்தியுள்ளார்.
ஆனால், சிவசேனா ஆட்சி அமைக்க ஆதரவு தருகிறோம், கூட்டணியில் பங்கேற்போம் என்று இதுவரை தேசியவாத காங்கிரஸ் தரப்பிலும் உறுதியான பதில் இல்லை. இந்த சூழலில், மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை இன்று காலை சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் சந்தித்துப் பேசினார்.
இதனால் குழப்பம் இன்னும் தீவிரமாகிய நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
''மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரஸ் ஆதரவு அளிக்காது. எனக்கும் மீண்டும் முதல்வராகும் ஆர்வமும் இல்லை. நான் ஏற்கெனவே 4 முறை முதல்வராக இருந்துவிட்டேன் என்பதால், அந்தப் பதவிக்கு மீண்டும் வர விரும்பவில்லை.
மக்கள் எங்களுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் எதிர்க்கட்சி வரிசையில் அமரவே வாக்களித்துள்ளார்கள். அந்தவகையில் நாங்கள் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்.
மாநிலத்தில் சிவசேனா-பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கவே மக்கள் வாக்களித்துள்ளார்கள். அதை ஏற்று இரு கட்சியினரும் விரைவில் ஆட்சி அமைக்க முன்வர வேண்டும். இந்த ஒருவாய்ப்பு மட்டும்தான் இருக்கிறது. குடியரசுத் தலைவர் ஆட்சி அமலாவதைத் தவிர்க்க வேண்டும்.
சிவசேனாவும் பாஜகவும் கடந்த 25 ஆண்டுகளாக கூட்டணி அமைத்து வருகின்றன. இதில் நாங்கள் சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தால், நாளை மீண்டும் பாஜகவுடன் இணக்கமாக சிவசேனா செல்வதற்கு வாய்ப்புள்ளது. ஆதலால், நாங்கள் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாகவே செயல்படுகிறோம்.
மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி என்ன விதமான அரசியல் சூழல் எடுத்திருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியாது. மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை எங்கள் கட்சியின் பிரபுல் படேல் சந்தித்ததில் எந்தவித அரசியல் நோக்கமும் இல்லை. சாலைப் பணிகள் விரைவுபடுத்துவது குறித்து சந்தித்துப் பேசினார்.
மழையினால் பயிர்கள் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு உதவ வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று நான் பார்வையிட்டேன். விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கிட வேண்டும். பயிர் சேதத்துக்குக் காப்பீடு நிறுவனங்கள் உரிய நிவாரணத்தை அளிப்பதில்லை. இதில் நிதியமைச்சகம் தலையிட்டு விவசாயிகளுக்கு நியாயம் வழங்கிட வேண்டும்''.
இவ்வாறு சரத் பவார் தெரிவித்தார்.
பிடிஐ