மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது யார்?- சரத்பவாருடன் சஞ்சய் ராவத் திடீர் சந்திப்பு

சிவசேனா எம்.பி. சஞ்சய்.ராவத்: கோப்புப் படம்
சிவசேனா எம்.பி. சஞ்சய்.ராவத்: கோப்புப் படம்
Updated on
2 min read

மும்பை

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் இன்று சந்தித்துப் பேசினார்.

மகாராஷ்டிராவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கு 56 இடங்களும் கிடைத்தன. ஆனால், இரு கட்சிகளுக்கு இடையே கருத்தொற்றுமை இல்லாததால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. ஆட்சி அமைக்க 146 இடங்கள் தேவை. பாஜக, சிவசேனா கூட்டணிக்கு ஆட்சி அமைக்கப் போதுமான பெரும்பான்மை இடங்கள் இருந்தபோதிலும் கருத்தொற்றுமை இல்லாததால் இழுபறி நீடிக்கிறது.

தேர்தலுக்கு முந்தைய ஒப்பந்தத்தின்படி ஆட்சி அதிகாரத்தில் சமபங்கு கேட்டு சிவசேனா கோரி வருகிறது. ஆனால், தேர்தலுக்கு முன் எந்தவிதமான ஒப்பந்தமும் செய்யவில்லை. அவ்வாறு அதிகாரத்தில் சமபங்கு அளிக்க இயலாது என்று பாஜக திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

வரும் 8-ம் தேதிக்குள் சட்டப்பேரவையின் காலம் முடிவதால் அதற்குள் புதிய ஆட்சி அமைக்க வேண்டும். இல்லாவிட்டால், ஆளுநர் முடிவு எடுக்க வேண்டிய நிலை ஏற்படும். இந்த சூழலில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தை நேற்று இரவு முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் சந்தித்துப் பேசியுள்ளார்.

இதற்கிடையே சிவேசனா தனது பிடியில் உறுதியாக இருந்து வருகிறது. மகாராஷ்டிரா மக்கள் சிவசேனாவில் இருந்து முதல்வராக ஒருவர் வருவதைத்தான் விரும்புகிறார்கள் என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் இன்று கூறியிருப்பது, பாஜக- சிவசேனா இடையிலான சிக்கலை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

இந்த சூழலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் சிவசேனா ஆட்சி அமைக்குமா என்ற ஊகமும் வலுத்துள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் பலகட்ட ஆலோசனைகளை மாநில அரசியல் தொடர்பாக நடத்தியுள்ளார்.

ஆனால், சிவசேனா ஆட்சி அமைக்க ஆதரவு தருகிறோம், கூட்டணியில் பங்கேற்போம் என்று இதுவரை தேசியவாத காங்கிரஸ் தரப்பிலும் உறுதியான பதில் இல்லை. இந்த சூழலில் இன்று நண்பகலுக்குப் பின் சரத்பவார் ஊடகங்களைச் சந்தித்து பல்வேறு முக்கிய முடிவுகளை அறிவிப்பார் என்று அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த சூழலில், மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை இன்று காலை சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் முழுமையான விவரங்கள் ஏதும் தெரியவில்லை. சந்திப்பு முடித்து வெளியே வந்த சஞ்சய் ராவத்திடம் நிருபர்கள் கேட்டபோது, "மரியாதை நிமித்தமாக சரத்பவாரைச் சந்தித்தேன் வேறு ஏதும் இல்லை" என்றார்.

இதனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் புதிய ஆட்சி 8-ம் தேதிக்குள் அமையுமா அல்லது குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுமா என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in