Published : 06 Nov 2019 10:45 AM
Last Updated : 06 Nov 2019 10:45 AM

ஆர்சிஇபி தாராள வர்த்தக ஒப்பந்தத்தில் இணைய மாட்டோம்: பிரதமர் மோடியின் முடிவுக்கு பியூஷ் கோயல் பாராட்டு

புதுடெல்லி

தாராள வர்த்தக ஒப்பந்தத்தில் (ஆர்சிஇபி) இணைவதில்லை என்ற பிரதமர் நரேந்திர மோடியின் முடிவுக்கு மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் பாராட்டு தெரிவித்துள்ளார். பிராந்திய ஒருங்கிணைந்த பொருளாதார ஒத்துழைப்பு (ஆர்சிஇபி) அமைப்பில், ஆசியான் அமைப்பின் 10 நாடுகள் மற்றும் சீனா, இந்தியா, ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய 6 நாடுகளும் உறுப்பினர்களாக உள்ளன.

இந்த 16 நாடுகளுக்கிடையே, தாராள வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில்தான் தாய்லாந்தின் பாங்காக் நகரில் ஆசியான் நாடுகள் உச்சி மாநாடு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, ஆர்சிஇபி மாநாடும் நடைபெற்றது. இதில், பங்கேற்றுப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “ஆர்சிஇபி ஒப்பந்த வரைவை ஆய்வு செய்தபோது, அதில் இந்தியாவுக்கு சாதகமான அம்சங்கள் தென்படவில்லை.

எனவே, இந்த ஒப்பந்தத்தில் இந்தியா இணையாது” என்றார். இதுகுறித்து இந்திய அரசு வட்டாரத்தினர் கூறும்போது, “இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால், வேளாண்மை மற்றும் தொழில் துறை சார்ந்த ஏராளமான பொருட்களை உறுப்பு நாடுகளுக்கு சீனா குறைந்த விலையில் ஏற்றுமதி செய்யும். இந்தியாவுக்கு பலன் கிடைக்காது” என்றனர். இந்நிலையில், மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆர்சிஇபி ஒப்பந்தம் நமது பொருளாதார நலன் மற்றும் நாட்டின் முன்னுரிமைக்கு எதிரானதாக உள்ளது.

எனவே, அதில் இணைவதில்லை என்று துணிச்சலாக முடிவு எடுத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார். இதுபோல, பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரும் மோடிக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். எனினும், இந்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலின் முந்தைய நிலைப்பாட்டுக்கு மாறாக உள்ளது.

“ஆர்சிஇபி-யில் நாம் இணையவில்லை என்றால், மிகப்பெரிய வர்த்தக கூட்டணியான இதிலிருந்து நாம் தனிமைபடுத்தப்படுவோம். இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால், உறுப்பு நாடுகளுக்கிடையிலான வர்த்தக மதிப்பு ரூ.199 லட்சம் கோடியாக இருக்கும். இதில் இந்தியா இணையாமல் இருப்பதால் நமக்குதான் இழப்பு. அதேநேரம் சீன பொருட்கள் இறக்குமதியைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என முன்னதாக கூறியிருந்தார்.

மேலும் ஆர்சிஇபி ஒப்பந்தத்தில் இணைந்தால் நம் நாட்டுக்கு பாதகம் ஏற்படும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 2 தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார். இதற்கும் பியூஷ் கோயல் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x