

நாக்பூர்
மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் நிலையில், முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், நேற்று இரவு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தை திடீரென சந்தித்துப் பேசினார்.
இருவருக்கும் இடையே ரகசியமான முறையில் நடந்த சந்திப்பு என்பதால், சந்திப்பின் விவரங்கள் குறித்து வெளியிடப்படவில்லை.
மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் காலம் வரும் 8-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள் புதிய அரசு பதவி ஏற்க வேண்டும். இந்த சூழலில் சிவசேனா முதல்வர் பதவி கேட்டு பிடிவாதமாக இருந்துவரும் நிலையில் பட்னாவிஸ், மோகன் பாகவத் சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.
மகாராஷ்டிராவில் உள்ள 288 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டு 2 வாரங்கள் ஆகின்றன. பாஜகவும் சிவசேனாவும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. இதில் தனித்தனியாக எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் பாஜகவுக்கு 105, சிவேசனாவுக்கு 56 இடங்கள் என கூட்டணிக்கு மட்டும் ஆட்சி அமைக்கப் பெரும்பான்மை கிடைத்துள்ளது. ஆட்சி அமைக்க 146 இடங்கள் தேவை.
இந்த சூழலில் தேர்தலுக்கு முன் செய்து கொண்ட உடன்பாட்டின்படி ஆட்சியில் சமபங்கு கேட்டு சிவசேனா பிடிவாதம் காட்டி வருகிறது. ஆனால், ஆட்சியில் சமபங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை. முதல்வர் பதவியைத் தவிர வேறு எதுவேண்டுமானாலும் பேசலாம் என்று பாஜக திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இதனால், இரு கட்சிகளுக்கு இடையே ஆட்சி அமைப்பது தொடர்பாக முறைப்படியான பேச்சுவார்த்தை நடக்காமலும், புதிய ஆட்சி அமையாமலும் இழுபறி நீடித்து வருகிறது. மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் காலம் வரும் 8-ம் தேதியுடன் முடிகிறது. அதற்குள் புதிய ஆட்சி பதவி ஏற்க வேண்டும். இல்லாவிட்டால், அரசியலமைப்புச் சட்டப்படி அடுத்ததாக என்ன செய்ய வேண்டுமோ அதாவது ஆளுநர் முடிவு எடுக்க வேண்டியது இருக்கும். ஒருவேளை எந்தஜ் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை, அல்லது எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க விருப்பமில்லை என்ற பட்சத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பரிந்துரைக்கலாம்.
ஆனால், அந்த அளவுக்கு சூழலை மோசமாகக் கொண்டு செல்ல சிவசேனாவும் பாஜகவும் விரும்பமாட்டார்கள் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். முதல்வர் பதவியைத் தவிர வேறு பல விஷயங்களை சிவசேனாவுக்கு விட்டுக்கொடுக்க பாஜக தயாராக இருக்கிறது. அதற்காக எப்போதும் பேச்சுவார்த்தைக்கு வரலாம் என்று மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீலும் தெரிவித்துள்ளார்.
ஆர்எஸ்எஸ் தலைவரைச் சந்தித்துவிட்டுத் திரும்பும் முதல்வர் பட்னாவிஸ் : படம் ஏஎன்ஐ
இந்த சூழலில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், நேற்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தைச் சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச் சந்திப்பு ஏறக்குறைய ஒன்றரை மணிநேரம் நடந்துள்ளது. இருவருக்கும் இடையே தனிப்பட்ட முறையில் சந்திப்பு நடந்ததால், இதில் என்ன பேசப்பட்டது, எதைப் பற்றிப் பேசினார்கள், என்ன ஆலோசிக்கப்பட்டது என்பது குறித்த விவரம் வெளியிடப்படவில்லை.
வரும் 8-ம் தேதிக்குள் புதிய ஆட்சி அமைக்க வேண்டிய நிர்பந்தத்தில் பாஜக இருப்பதால், சிவசேனாவுடனான மோதல் நாளைக்குள் முடிவுக்கு வரலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏஎன்ஐ