சந்திரயான் 2 வெற்றி இளைஞர்களின் அறிவியல் ஆர்வத்தை தூண்டியுள்ளது: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

கொல்கத்தாவில், 5-வது இந்தியா-சர்வதேச அறிவியல் திருவிழா நேற்று தொடங்கியது. 4 நாட்களுக்கு நடைபெறும் இவ்விழாவை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். படம்: பிடிஐ
கொல்கத்தாவில், 5-வது இந்தியா-சர்வதேச அறிவியல் திருவிழா நேற்று தொடங்கியது. 4 நாட்களுக்கு நடைபெறும் இவ்விழாவை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். படம்: பிடிஐ
Updated on
1 min read

சந்திரயான் 2 வெற்றி, இளைஞர்களின் அறிவியல் ஆர்வத்தை தூண்டியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் 5-வது இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா நேற்று தொடங்கியது. மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறையின் ‘விஞ்ஞான் பாரதி' நடத்தும் இந்த அறிவியல் திருவிழாவை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து நேற்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: அறிவியல் துறையில் இந்தியா பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. இதில் சந்திரயான் 2 வெற்றியும் ஒன்றாகும். இதன்காரணமாக இந்திய இளைஞர்களின் அறிவியல் ஆர்வம் தூண்டப்பட்டிருக்கிறது. அவர்கள் அறிவியல் ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும். அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியை மனித குலத்தின் வளர்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டும்.

நூடுல்ஸ், பிட்சா தயாரிப்பது போல அறிவியல் ஆராய்ச்சியில் உடனடியாக பலனை எதிர்பார்க்க முடியாது. ஆராய்ச்சிக்கு பொறுமை மிகவும் அவசியம். ஒரு தலைமுறையின் கண்டுபிடிப்பு, அடுத்த தலைமுறைக்கு பயனுள்ளதாக அமையும்.

அறிவியல் ஆராய்ச்சிகளைப் பொறுத்தவரை தோல்வியே கிடையாது. வெற்றி கிடைக்கும் வரை முயற்சிகள் தொடரும். அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி இன்றி எந்தவொரு நாடும் முன்னேற முடியாது. அறிவியல் ஆராய்ச்சியில் இந்தியா முன்னோடியாக திகழ்கிறது. சர் சி.வி. ராமன், ஜெகதீஷ் சந்திர போஸ் உள்ளிட்ட தலைசிறந்த விஞ்ஞானிகளை உலகுக்கு இந்தியா வழங்கியுள்ளது. நமது விஞ்ஞானிகளின் சாதனைகள் தொடரும். இவ்வாறு அவர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in