உ.பி.யின் அலகாபாத் நகரில் திருவள்ளுவர் சிலை: முதல்வர் ஆதித்யநாத்தின் அனுமதிக்கு 4 ஆண்டாக காத்திருக்கும் பாஷா சங்கம்

உ.பி.யின் அலகாபாத் நகரில் திருவள்ளுவர் சிலை: முதல்வர் ஆதித்யநாத்தின் அனுமதிக்கு 4 ஆண்டாக காத்திருக்கும் பாஷா சங்கம்
Updated on
1 min read

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி

அலகாபாத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்க கடந்த 29 ஆண்டுகளாக முயற்சிக்கப்பட்டு வருகிறது. இதற்காக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அனுமதிக்காக கடந்த 4 வருடங்களாக பாஷா சங்கத்தினர் காத்திருக்கின்றனர்.

அலகாபாத்தில் கங்கை, யமுனை மற்றும் மண்ணுக்குள் பாய்வதாக கருதப்படும் சரஸ்வதி ஆகிய மூன்று ஆறுகளின் திரிவேணி சங்கமத்தில் மூழ்கி புண்ணியம் தேட ஏராளமான தமிழர்கள் நாள்தோறும் வருகின்றனர். எனவே, அங்கு திருவள்ளுவர் சிலை அமைக்க உ.பி.யின் இந்தி அறிஞர்கள் விரும்பினர். இவர்கள், உ.பி.யில் மொழிகளை இணைக்க அமைந்த ‘பாஷா சங்கம்’ எனும் சமூகசேவை அமைப்பை சேர்ந்தவர்கள்.

பெரும்பாலும் வட மாநிலத்தவர் கொண்ட இந்த அமைப்பு, அலகாபாத்தை தலைமையிடமாகக் கொண்டு 1976 முதல் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் சார்பில் 1990-ம் ஆண்டு முதல் அலகாபாத் சங்கமத்தின் தென்கரை சாலைக்கு திருவள்ளுவர் பெயரை வைத்து அவரது சிலையையும் அமைக்க வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், பாஷா சங்க கோரிக்கை அலகாபாத் மாநகராட்சியால் ஜூன் 24, 2017-ல் ஏற்கப்பட்டது. இதையடுத்து ஜூலை 10-ல் தென்கரை சாலைக்கு ‘தமிழ்கே சந்த் கவி திருவள்ளுவர் மார்க' (தமிழ் ஐயன் திருவள்ளுவர் சாலை)’ என்ற இந்தி, தமிழ் கல்வெட்டுக்களை இன்மா இண்டர்நேஷனல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரத்தினவேல் திறந்து வைத்தார். அத்துடன் நன்கொடையாக அவர் ஜனவரி 15-ல் திருவள்ளுவர் தினம் அன்று சிலை வைக்க ரூ.1 லட்சம் முன்பணமும் அளித்திருந்தார். ஆனால், உ.பி.யில் அமைந்த பாஜக ஆட்சியால் திருவள்ளுவர் சிலைக்கு தடை ஏற்பட்டது.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் பாஷா சங்கத்தின் பொருளாளரான சந்திர மோகன் பார்கவா கூறியதாவது:கடந்த ஆட்சியில் முதல்வராக இருந்த அகிலேஷ் சிங் யாதவ் உத்தரவின் பேரில், திருவள்ளுவர் சிலை அமைக்கவும், சாலைக்கு திருவள்ளுவர் பெயர் வைக்கவும் அலகாபாத் மாநகராட்சி நிர்வாகம் அனுமதி அளித்திருந்தது.

சாலைக்கு திருவள்ளுவர் பெயர் வைத்த பின்னர், அந்த இடம் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வருவதாக கூறி, அலகாபாத் வளர்ச்சி ஆணையம், திருவள்ளுவர் சிலை வைக்க தடை விதித்தது. அதன் பிறகு அமைந்த பாஜக ஆட்சியில், இதுதொடர்பாக அனுமதி பெறுவதற்கு முதல்வரை சந்திக்க இயலாத நிலை உள்ளது என அவர் கூறினார்.

இதுகுறித்து, பாஷா சங்கம் பொதுச்செயலாளராக இருக்கும் முதல் தமிழரான முனைவர் எம்.கோவிந்தராஜன் கூறும்போது, ‘சங்கமம் அருகே ‘அரைன் காட்' எனும் இடத்தில் உள்ள சச்சா பாபா ஆசிரமத்தின் உள்ளே திருவள்ளுவர் சிலை வைத்துக் கொள்ள அதன் தலைவர் சுவாமி கோவிந்த தாஸ் முன்வந்தார். இதனால், திருவள்ளுவருக்கு குறிப்பிட்ட சமயத்தின் அடையாளம் வந்துவிடும் என அஞ்சி மறுத்து விட்டோம். எங்களுக்காக மறைந்த திமுக தலைவர் கருணாநிதி குரல் கொடுத்தும் சிலை அமைக்க முடியவில்லை’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in