

பிஹார் மாநில முன்னாள் முதல் வரும், `ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா' கட்சி தலைவருமான ஜிதன் ராம் மாஞ்சி, நேற்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் தனிஷ் ரிஸ்வான் கூறும்போது, "பிஹார் சட்டமன்றத்தில் இருந்து மாஞ்சி ராஜினாமா செய்துள்ளார். மேலும், ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் அவர் ராஜினாமா செய்துள்ளார்" என்று தெரிவித்தார்.
அடுத்து வர இருக்கும் பிஹார் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள பாரதிய ஜனதா கட்சியுடன் மாஞ்சி கூட்டணியில் இணைந்துள்ளார்.
ஐக்கிய ஜனதா தள தலைவரும் தற்போதைய பிஹார் முதல்வருமான நிதிஷ் குமார் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சியின் லாலு பிரசாத் யாதவ் ஆகியோரை இந்தத் தேர்தலில் தான் தோற்கடிக்கப் போவதாக, மாஞ்சி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.