

புதுடெல்லி
கர்நாடக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் எடியூரப்பாவின் பேச்சு அடங்கிய ஆடியோ பதிவை கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற காங்கிரஸ் தரப்பு வாதத்தை ஏற்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கர்நாடக சட்டப்பேரவையில் கடந்த ஜூலை 23-ம்தேதி ஜேடிஎஸ், காங்கிரஸ் கூட்டணி அரசின் முதல்வராக இருந்த குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சியின் கொறடாக்கள் தங்கள் எம்எல்ஏக்களுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தனர்.
ஆனால், காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சியின் அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டு மும்பையில் உள்ள சொகுசு ஓட்டலில் தங்கினர். நம்பிக்கை வாக்கெடுப்பிலும் இந்த எம்எல்ஏக்கள் பங்கேற்காததால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் ஆட்சி கவிழ்ந்தது.
இதையடுத்து காங்கிரஸ், ஜேடிஎஸ் மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்கள் 17 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ் குமார் உத்தரவு பிறப்பித்தார். இதன் மூலம் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்களும் 2023-ம் ஆண்டு வரை தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது.
இதை எதிர்த்து 17 எம்எல்ஏக்களும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது.
இந்தநிலையில் சில தினங்களுக்கு முன்பு பாஜக உயர்நிலைக்குழு கூட்டத்தில் முதல்வர் எடியூரப்பா அக்கட்சியின் மேலிடத் தலைவர்கள் மீது அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக பேசிய வீடியோ காட்சி பரபரப்பை ஏற்படுத்தியது. இதை காரணம் காட்டி, கர்நாடக அரசை கலைக்கக் கோரி காங்கிரஸ் ஆளுநரிடம் மனு அளித்துள்ளது.
இதையடுத்து கர்நாடக காங்கிரஸ் மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி எடியூரப்பாவின் பேச்சு அடங்கிய ஆடியோ பதிவை தாக்கல் செய்தார். எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில், அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டிற்கு இந்த ஆடியோவை ஆதாரமாக கருத வேண்டும் என்று கோரினார்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி என்.வி. ரமணா அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கபில்சிபலின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், விசாரணையின் போதே இந்த அம்சம் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டதால் மீண்டும் வாதம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை எனத் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்க தயாராகி வருவதாகவும் நீதிபதிகள் கூறினார்.