

மும்பை
மகாராஷ்டிராவில் அடுத்த முதல்வர் சிவசேனாவை சேர்ந்தவராக தான் இருப்பார் என அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் முதல்வர் பதவி ஏற்கக்கூடும் என தகவல் வெளியான நிலையில் இதனை அவர் மறுத்துள்ளார்.
மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, சிவசேனா கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வென்றன. பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவை என்ற நிலையில் இந்தக் கூட்டணிக்குப் பெரும்பான்மை இருக்கிறது. ஆனால் தனித்தனியாகப் பெரும்பான்மை இல்லை.
ஆனால் தேர்தலுக்குமுன் செய்த உடன்பாட்டின்படி ஆட்சியில் இரண்டரை ஆண்டு காலத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சிவசேனா பாஜகவிடம் கோருகிறது. ஆனால், எந்தவிதமான ஒப்பந்தமும் செய்யப்படவில்லை, 50;50 பங்கு தரமுடியாது என்று பாஜக சார்பில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துவிட்டார்.
இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே ஆட்சி அமைப்பது தொடர்பாக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இழுபறி நீடித்து வருகிறது. பாஜக தவிர்த்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க சிவசேனா காய்களை நகர்த்தி வருகிறது.
இந்தச் சூழலில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் டெல்லி சென்று உள்துறை அமைச்சரும், பாஜக தேசியத் தலைவருமான அமித் ஷாவைச் சந்தித்தார்.
காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் சந்தித்து மாநில அரசியல் குறித்து ஆலோசனை நடத்தினார்.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் முதல்வர் பதவி ஏற்ககூடும் என தகவல் வெளியாகின. சரத் பவார் பதவியேற்க சிவசேனாவும், காங்கிரஸூம் ஆதரவளிக்கும் என பேசப்பட்டது. ஆனால் இதனை சஞ்சய் ராவத் மறுத்துள்ளார். சிவசேனாவை சேர்ந்தவர் தான் முதல்வராக இருப்பார் என அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் கூறியதாவது:
‘‘மகாராஷ்டிராவில் அடுத்த முதல்வர் சிவசேனாவை சேர்ந்தவராக தான் இருப்பார். இதில் எந்த மாற்றமும் இல்லை.
மகாராஷ்டிராவின் நலனுக்காகவே இந்த முடிவை எடுத்துள்ளோம். மகாராஷ்டிராவின் அரசியல் தற்போது மாறி வருகிறது. நீதிக்காகவே போராடி வருகிறோம்’’ எனக் கூறினார்.