

ஹைதராபாத்
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே ரங்காரெட்டி மாவட்டத்தில் அப்துல்லாப்பூர்மெட் என்ற இடத்தில் பெண் வட்டாட்சியர் விஜயா என்பவரை அலுவலக அறையிலேயே நபர் ஒருவர் தீ வைத்து எரித்த பயங்கர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அலுவலக அறையில் நுழைந்த நபரின் பெயர் குரா சுரேஷ் என்பது பிற்பாடு தெரியவந்தது. நிலத் தகராறு தொடர்பாக வட்டாட்சியருக்கும் இவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது என்றும் வாக்குவாதம் முற்ற கையில் தயாராக கொண்டு வந்திருந்த பெட்ரோலை வட்டாட்சியர் மீது ஊற்றி தீவைத்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியதாக தனியார் தொலைக்காட்சிச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவம் தொடர்பாக ரச்சகொண்டா போலீஸ் கமிஷனர் மகேஷ் முரளிதர் பாக்வத் கூறும்போது, “விஜயா ரெட்டி அலுவலக அறைக்குள் நபர் ஒருவர் நுழைந்தார். தாசில்தார் மீது பெட்ரோலை ஊற்றி அந்த நபர் தீவைத்துள்ளார். உதவி கேட்டு அலறியபடி, எரியும் நிலையில் தாசில்தார் தன் அறை வாசலுக்கு வந்து கீழே சரிந்தார். உடனே ஊழியர்கள் இருவர் அவரது உடலில் பற்றிய தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அவரது முயற்சி வீணானது. அவரது உடலை பிறகு ஊழியர்கள் போர்வை போட்டு மறைத்தனர்.
விஜயா ரெட்டி சம்பவ இடத்திலேயே மரணமடைய, இரண்டு ஊழியர்களுக்கும் தீக்காயம் ஏற்பட்டது. இந்தக் கொலையைச் செய்தவர் என்று சந்தேகப்படுவதற்குரிய நபர் ஒருவர் அப்துல்லாபூர்மேட் போலீஸ் நிலையத்திற்கு வந்து தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறினார், ஆனால் அவர் உடலிலும் தீக்காயம் இருந்ததால் உடனடியாக மருத்துவமனைக்கு இட்டுச் செல்லப்பட்டார்.
தகவலறிந்த அப்துல்லாப்பூர்மேட் காவலதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீக்காயம் அடைந்த ஊழியர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்தச் சம்பவத்துக்குக் காரணமானவர் குரா சுரேஷ் என்ற நபர் என்று தெரியவந்துள்ளது. இவர் ஹயாத்நகர் மண்டல் கவ்ரேலியைச் சேர்ந்தவர், இவருக்கும் இவரது சகோதரருக்கும் சொந்தமான 7 ஏக்கர் நிலம் குறித்து தகராறு இருந்துள்ளது. இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தாசில்தார் அலுவலகத்துக்கு சுரேஷ் திட்டமிட்டுத்தான் வந்துள்ளார்.
இந்த வழக்கு துரித நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை வாங்கித்தரப்படும்” என்றார்.
இந்தச் சம்பவத்தைக் கண்டித்து நீதி கேட்டு வருவாய் துறை ஊழியர்கள் தர்ணா ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவம் தெலங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.