

புதுடெல்லி
டெல்லி, என்சிஆர் பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காற்று மாசால் மக்கள் விலை மதிக்கமுடியாத வாழ்நாளை இழந்து வருகிறார்கள். மக்களை சாகச் சொல்கிறீர்களா என்று அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்றம் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளது.
டெல்லியில் காற்று மாசைக் குறைப்பது தொடர்பாக சுற்றுச்சூழல் மாசுக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் சார்பில் ஒரு குழுவை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அந்தக் குழு காற்று மாசைக் குறைப்பதற்கான வழிகளை ஆய்வு செய்து கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அறிக்கை அளித்தது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, தீபக் குப்தா ஆகியோர் முன் அந்த அறிக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அந்த அறிக்கையைப் படித்த நீதிபதிகள் அருண் மிஸ்ரா, தீபக் குப்தா அதிகாரிகளைக் கடுமையாக விமர்சித்தனர்.
நீதிபதிகள் அருண் மிஸ்ரா, தீபக் குப்தா அமர்வு அதிகாரிகளிடம் பேசுகையில், "டெல்லியில் நிலவும் மோசமான சூழலில் மக்கள் வாழ முடியுமா? மக்களும், நாங்களும் உயிர் வாழ்வதற்கு இது சரியான வழி அல்ல, இடமும் அல்ல. மக்களை அதிகாரிகளான நீங்கள் சாகச் சொல்கிறீர்களா?
இதை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். மாநில அரசுகளுக்கு என பொறுப்புகளை விதிக்கப் போகிறோம். ஒவ்வொரு ஆண்டும் டெல்லியில் இதே நிலைதான் நீடிக்கிறது. ஆனால் ஏதும் செய்ய முடியாதவர்களாக இருக்கிறோம். எங்களுடைய கேள்வி எல்லாம், ஒவ்வொரு ஆண்டும் நடப்பது ஏன் என்பதுதான்.
பஞ்சாப், ஹரியாணாவில் வயல்களில் அறுவடை செய்த நெற்கதிர்களை ஏன் எரிக்கிறார்கள் என்பது குறித்து ஆழ்ந்த கவலை கொள்கிறோம். இந்த விஷயத்தை மாநில அரசுகள் கையாண்டு தீர்க்க முடியவில்லையா?
டெல்லி-என்சிஆர் பகுதியில் பரவியுள்ள காற்று மாசு மிகக் கொடூரமானது. கொடுமையானது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வராதீர்கள் என்று கூறுகிறீர்களே? இதற்கு யார் பொறுப்பு, மாநில அரசுகள்தானே பொறுப்பு.
நீங்கள் மக்களைச் சாகச் சொல்கிறீர்கள். பஞ்சாப், ஹரியாணா அரசுகள் கூட காற்று மாசால் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த இரு மாநிலங்களிலும் நிர்வாகம் ஏதாவது செயல்படுகிறதா?" எனக் காட்டமாகத் தெரிவித்தனர்.
காற்று மாசு விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்துக்கு உதவ மூத்த வழக்கறிஞர் அபராஜிதா சிங் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் அளித்த அறிக்கையில், பஞ்சாபில் காய்ந்த நெற்கதிர்களை எரிப்பது 7 சதவீதம் அதிகமாகவும், ஹரியாணாவில் 17 சதவீதம் குறைந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
ஆனால், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, தீபக் குப்தா ஆகியோர், அடுத்த 30 நிமிடங்களில் சுற்றுச்சூழல் வல்லுநர்கள், ஐஐடியில் இருக்கும் பேராசிரியர்கள், வல்லுநர்கள் அனைவரும் நீதிமன்றத்துக்கு வரவழைக்க மத்திய அரசுக்கு உத்தரவிடுகிறோம் எனத் தெரிவித்தனர்.
பிடிஐ