Published : 04 Nov 2019 02:55 PM
Last Updated : 04 Nov 2019 02:55 PM

ஸ்ரீநகரில் மார்க்கெட் பகுதியில் கையெறி குண்டு மூலம் தீவிரவாதி தாக்குதல்: ஒருவர் பலி; 13 பேர் காயம்

ஸ்ரீநகர்

ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் பரபரப்பான மார்க்கெட் பகுதியில் தீவிரவாதி ஒருவர் கையெறி குண்டு மூலம் இன்று தாக்குதல் நடத்தினார். இதில் பொதுமக்களில் ஒருவர் கொல்லப்பட்டார்.13 பேர் காயமடைந்தனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கிய மத்திய அரசு, ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகியவற்றை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து அறிவித்தது. இது கடந்த மாதம் 31-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்நிலையில், கடந்த வாரம் வடக்கு காஷ்மீர் பகுதியில் இருக்கும் சோப்பூரில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் மார்க்கெட் பகுதியில் தீவிரவாதி நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் 15 பேர் காயமடைந்தனர்.

இந்தச் சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் ஸ்ரீநகரில் உள்ள பரபரப்பான ஹரி சிங் மார்க்கெட் தெருவில் இன்று நண்பகல் 1.20 மணிக்கு தீவிரவாதி ஒருவர் கையெறி குண்டு தாக்குதல் நடத்தினார்.

மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் இந்தப் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். 13 பேர் காயமடைந்தனர். இதில் காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 10 நாட்களில் பொதுமக்கள் மீது நடத்தப்படும் 3-வது தாக்குதல் இதுவாகும். கடந்த 26-ம் தேதி சிஆர்பிஎப் பாதுகாவலர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 6 பேர் காயமடைந்தனர்.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஹரி சிங் மார்க்கெட் தெருவில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மார்க்கெட் பகுதியில் இருந்த கடைகள் அனைத்தும் மூடப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x