

அயோத்தி
அயோத்தி விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் பொது மக்கள் சமூக வலைதளங்களில் தகவல்களைப் பகிரும்போது பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என உத்தரப் பிரதேச அரசு வலியுறுத்தியுள்ளது.
இதன் காரணமாக உத்தரப் பிரதேசம் மட்டுமன்றி அனைத்து மாநிலங்களும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை இந்து மற்றும் முஸ்லிம் அமைப்புகள் உரிமை கோரி வருகின்றன. இந்த வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்றம் விசாரித்தது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாடா, ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கடந்த 2010 செப்டம்பர் 30-ம் தேதி அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இவ்வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.அப்துல் நசீர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த மார்ச் 8-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அயோத்தி ராமஜென்ம பூமி- பாபர் மசூதி நில விவகாரத்தில் சுமுகத் தீர்வு காண 3 பேர் கொண்ட சமரசக் குழுவை அரசியல் சாசன அமர்வு நியமித்தது.
இந்தக் குழுவில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கலிபுல்லா, வாழும் கலை அமைப்பின் தலைவர் ரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இடம் பெற்றனர். இந்தக் குழுவின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் அயோத்தி வழக்கில் நாள்தோறும் விசாரணை நடத்தப்பட்டு இருதரப்பு வாதங்கள் கடந்த 16-ம் தேதி நிறைவடைந்தன.
இதனிடையே, 3 பேர் அடங்கிய சமரசக் குழு கடந்த மாதம் 16-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ரகசிய அறிக்கையை தாக்கல் செய்தது. அதன்படி சர்ச்சைக்குரிய ராம ஜென்ம பூமி நிலத்தை அரசே கையகப்படுத்திக் கொள்ள சன்னி வக்பு வாரியம் சம்மதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனை இதர முஸ்லிம் அமைப்புகள் மறுத்தன.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வரும் 17-ம் தேதி ஓய்வு பெறுகிறார். வரும் 13-ம் தேதி அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்படலாம், ஒருவேளை அன்றைய தினம் தவறினால் 14, 15-ம் தேதிகளில் கண்டிப்பாக தீர்ப்பு வெளியாகும் என்று உச்ச நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அயோத்தி வழக்கு தீர்ப்பையொட்டி உத்தரப் பிரதேசத்தின் பல நகரங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட அயோத்தியில் ஏற்கெனவே 144 தடை உத்தரவு அமல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அயோத்தி விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் பொதுமக்கள் சமூக வலைதளங்களில் தகவல்களைப் பகிரும்போது பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என உத்தரப் பிரதேச அரசு வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அயோத்தி மாவட்ட ஆட்சியர் அனுஜ் குமார் கூறியுள்ளதாவது:
''அயோத்தி தீர்ப்பை நாடே எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. எனவே அயோத்தி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அயோத்தி விவகாரங்கள் தொடர்பாகவும், தீர்ப்பு தொடர்பாகவும் பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பொறுப்புணர்வுடன் தகவல்களைப் பகிருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
எந்த ஒரு குறிப்பிட்ட சமூகம் மற்றும் மத விவகாரங்கள் தொடர்பாக அவதூறாகத் தகவல்களைப் பகிர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அயோத்தி மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களும் இந்த விவகாரத்தில் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்''.
இவ்வாறு அனுஜ் குமார் கூறியுள்ளார்.