Published : 04 Nov 2019 01:40 PM
Last Updated : 04 Nov 2019 01:40 PM

மகாராஷ்டிராவில் விரைவில் புதிய அரசு அமையும்: அமித் ஷா சந்திப்புக்குப் பிறகு தேவேந்திர பட்னாவிஸ் பேட்டி

புதுடெல்லி

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் சிவசேனா, பாஜக இடையே இழுபறி நீடித்து வரும் நிலையில், முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், இன்று பாஜக தேசியத் தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை சந்தித்துப் பேசினார்.

மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, சிவசேனா கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வென்றன. பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவை என்ற நிலையில் இந்தக் கூட்டணிக்குப் பெரும்பான்மை இருக்கிறது. ஆனால் தனித்தனியாகப் பெரும்பான்மை இல்லை.

ஆனால் தேர்தலுக்கு முன் செய்து உடன்பாட்டின்படி ஆட்சியில் இரண்டரை ஆண்டு காலத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சிவசேனா பாஜகவிடம் கோருகிறது. ஆனால், எந்தவிதமான ஒப்பந்தமும் செய்யப்படவில்லை, 50;50 பங்கு தரமுடியாது என்று பாஜக சார்பில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துவிட்டார்.

இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே மாநிலத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பாக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இழுபறி நீடித்து வருகிறது.

பாஜக தவிர்த்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க சிவசேனா காய்களை நகர்த்தி வருகிறது. ஆனால், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி தங்களை எதிர்க்கட்சி வரிசையில் அமரத்தான் மக்கள் வாக்களித்துள்ளார்கள் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டன.

இந்த சூழலில் மகாராஷ்டிராவில் அரசியல் குழப்பம் அதிகரித்து வரும் நிலையில், தேர்தல் நேரத்தில் உத்தவ் தாக்கரே, அமித் ஷா இடையேதான் ஆட்சிப் பகிர்வு குறித்து ஒப்பந்தம் நடந்தது என்று சிவசேனா கூறி வருகிறது. ஆனால், குழப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இதுவரை அமித் ஷா தலையிடாமல் இருந்து வருகிறார்.

இதுகுறித்து சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் நேற்று அளித்த பேட்டியில், "தேர்தலுக்கு முன் மகாராஷ்டிராவுக்கு வந்து ஆட்சி அதிகாரம் பற்றி உடன்பாடு செய்தார் அமித் ஷா. ஆனால், தேர்தல் முடிந்த பின், மகாராஷ்டிராவை மறந்துவிட்டார். மகாராஷ்டிராவில் நிலவும் பிரச்சினையில் அமித் ஷா தலையிடாமல் இருப்பது புதிராகவே இருக்கிறது" எனத் தெரிவித்தார்.

இந்தச் சூழலில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் டெல்லி சென்று உள்துறை அமைச்சரும், பாஜக தேசியத் தலைவருமான அமித் ஷாவைச் சந்தித்தார். டெல்லியில் உள்ள அமித் ஷாவின் இல்லத்துக்குக் காலை சென்ற பட்னாவிஸ் அவரிடம் ஒரு கோரிக்கை மனுவை அளித்து பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

இந்தச் சந்திப்புக்குப் பின், முதல்வர் பட்னாவிஸ் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், " மாநிலத்தில் விவசாயிகளின் பயிர்கள் பருவம் தவறிய மழையால் சேதம் அடைந்துள்ளன. அதற்கு உரிய நிவாரணத்தை வழங்கிடக் கோரி மனு அளித்தேன். மாநிலத்தின் சூழல் குறித்துப் பேசினேன்.

ஆட்சி அமைப்பது தொடர்பாக மற்றவர்கள் பேசும் கருத்துக்கு நான் பதில் அளிக்கத் தயாராக இல்லை. ஆனால், விரைவில் பாஜக தலைமையில் புதிய அரசு பதவி ஏற்கும்" எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவை இன்று சந்தித்து மாநில அரசியல் குறித்து ஆலோசிக்க தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் திட்டமிட்டுள்ளார்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x