

லோக்பால் சட்டத் திருத்த மசோதா குறித்து ஆய்வு செய்துவரும் நாடாளுமன்ற நிலைக்குழு, தங்கள் மனைவி, பிள்ளைகளின் சொத்து விவரங்களை தெரிவிப்பதிலிருந்து அரசு அதிகாரிகளுக்கு விலக்கு அளிப்பது குறித்து கருத்து தெரிவிக்குமாறு அரசியல் கட்சிகளை கேட்டுக்கொண்டுள்ளது.
இதுகுறித்து நிலைக்குழுவின் தலைவர் இ.எம்.சுதர்சன நாச்சியப்பன் கூறும்போது, “லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டத்தின் 44-வது பிரிவில் திருத்தம் கொண்டுவருவது தொடர்பாக வரும் 14-ம் தேதிக்குள் கருத்து தெரிவிக்குமாறு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. மேலும் வரும் 18-ம் தேதி குழுவின் கூட்டம் நடைபெறும். அப்போது நேரில் ஆஜராகி கருத்து தெரிவிக்க விரும்பும் கட்சிகள் தங்கள் பிரதிநிதிகளை அனுப்பி வைக்கலாம் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றார்.
லோக்பால் சட்டத்தின்படி, அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களது (மனைவி, பிள்ளைகள் உட்பட) சொத்து மற்றும் பொறுப்புகளை ஆண்டுதோறும் மார்ச் 31-ம் தேதிக்குள் கட்டாயமாக தாக்கல் செய்ய வேண்டும். இதற்கு அரசு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதால், தங்களது மனைவி, பிள்ளைகளின் சொத்து விவரங்களை தெரிவிப்பதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, இதுதொடர்பான சட்டத் திருத்த மசோதா கடந்த ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர் 22-ம் தேதி இ.எம். சுதர்சன நாச்சியப்பன் (காங்கிரஸ்) தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது.
கடந்த மார்ச் 25-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. பின்னர் இந்த காலக்கெடு ஜூலை 30 வரை நீட்டிக்கப்பட்டது. இந்த காலக்கெடுவும் முடிந்த நிலையில், மேலும் கூடுதல் அவகாசம் கோரப்பட்டுள்ளது.