

மும்பை வாராந்திர இதழ் ஒன்றில், மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரே பற்றி விமர்சனபூர்வமாக வெளியான கட்டுரையை எதிர்த்து சிவசேனா கட்சி தனது சாம்னா பத்திரிக்கையில் தலையங்கம் தீட்டியுள்ளது.
அதில் இந்துக்கள் மீது அச்சம் கொள்ள வேண்டும் என்ற ஒரு பார்வையை பால்தாக்கரே தேசிய நலனுக்காகவே உருவாக்கினார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக திங்களன்று மும்பை நாரிமன் பாயிண்ட் பகுதியில் பால்தாக்கரே பற்றி கட்டுரை வெளிவந்த பத்திரிகையை எதிர்த்து சிவசேனா தொண்டர்கள் இதழின் நகல்களைக் கிழித்தும், எரித்தும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கட்டுரையை எதிர்த்து தானே மாவட்டத்தில் வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சாம்னா தலையங்கத்தில் கூறியிருப்பதாவது: “பாலாசாஹேப் தாக்கரே மீது மக்களுக்கு அன்பும் மரியாதையும் நிரம்ப உண்டு. அவரது தேசியவாத லட்சியங்கள் மீது மக்கள் எப்போதும் பெருமையே அடைந்துள்ளனர். மக்களிடையே இந்துக்கள் மீதான அச்சம் என்பதை உருவாக்கினார்.
இந்த நாட்டில் இந்துக்கள் கர்வத்துடன் வாழ வேண்டும். இதற்காகவே பால்தாக்கரேயின் குரல் சிங்கம் போல் கர்ஜித்தது. பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு பதில் அளிக்க வேண்டுமெனில் இந்துக்களும் தங்கள் மதத்தை போற்றித் தழுவி வாழவேண்டும்.
பாகிஸ்தானுக்கு பதில் அளிக்க வேண்டுமெனில் இந்துக்கள் மனித வெடிகுண்டுகளாக மாறி அந்நாட்டின் மீது படையெடுக்க வேண்டிய தேவை உள்ளது.
பாகிஸ்தான் தீவிரவாதத்துக்கு இத்தகைய பதிலடி கொடுப்பது பயங்கரவாதம் என்று அழைக்கப்பட்டால், அத்தகைய பயங்கரவாதம் தேச நலன் கருதியே என்பதை நாம் மறக்கலாகாது.பால்தாக்கரே அனைத்து மதங்களும் சமமே என்றார். 1984-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டபோது பால்தாக்கரே மாநிலத்தில் அமைதி நிலவ மக்களை கேட்டுக் கொண்டார்.
அவரது முறையீட்டினால்தான் அப்போது சீக்கிய மக்கள் மும்பையிலும் மாநிலத்தின் பிற பகுதிகளிலும் நிம்மதியாக வாழ முடிந்தது. எனவே பால்தாக்கரே பற்றி தவறான தகவல்களை எழுதி அந்த இதழ் தேவையில்லாத வகையில் பிரபமலமடைய முயற்சி செய்வதை நாங்கள் விரும்பவில்லை என்பதோடு, மக்களின் கோபம் எழுச்சியுற்றால் ஏற்கெனவே இறந்த நிலையில் உள்ள அந்த இதழ் மக்களால் சந்தையிலும் நசுக்கப்படும் என்பதை கூறிக்கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.