Published : 04 Nov 2019 10:04 AM
Last Updated : 04 Nov 2019 10:04 AM

எடியூரப்பாவின் அதிருப்தி பேச்சு எதிரொலி: கர்நாடக அரசை கலைக்கக் கோரி ஆளுநரிடம் காங்கிரஸ் மனு

இரா.வினோத்

பெங்களூரு

பாஜக உயர்நிலைக்குழு கூட்டத்தில் முதல்வர் எடியூரப்பா அக்கட்சியின் மேலிடத் தலைவர்கள் மீது அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக பேசிய வீடியோ காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை காரணம் காட்டி, கர்நாடக அரசை கலைக்கக் கோரி காங்கிரஸ் ஆளுநரிடம் மனு அளித்துள்ளது.

கர்நாடக பாஜகவின் உயர் நிலைக்குழு கூட்டம் கடந்த 27ம் தேதி ஹுப்பள்ளி நகரில் முதல்வர் எடியூரப்பா தலைமையில் நடை பெற்றது. இந்தக் கூட்டத்தில் எடியூரப்பா பேசுகையில், “தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ், மஜத 17 எம்எல்ஏக்களால்தான் கர்நாடகாவில் பாஜக அரசு அமைந்துள்ளது.எனது தலைமை யில் ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக அந்த 17 எம்எல்ஏக் களும் கட்சி எதிர்ப்பையும் மீறி, குடும்பத்தை விட்டு மும்பையில் மாதக்கணக்கில் தங்கி இருந் தார்கள். பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா நேரடியாக இந்த விவகாரத்தை கையாண்டார்.

பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டதால் அவர்களுக்கு இன்றுவரை எந்த நன்மையும் கிடைக்கவில்லை. நம்மை நம்பி மோசம் போன 17 எம்எல்ஏக்களுக்கு ஆதரவாக பாஜகவினர் யாரும் பேசவில்லை. ஆனால் தினமும் அவர்களை விமர்சித்து பேசி வருகின்றனர். இந்த எம்எல்ஏக்களுக்கு என்னால் எந்த நன்மையையும் செய்ய முடியவில்லை. கட்சிமேலிடம்தான் ஏதாவது செய்ய வேண்டும்.

இந்த எம்எல்ஏக்களை இடைத் தேர்தலில் வெற்றிபெற வைத்து, உரிய கவுரவம் அளிக்க வேண்டும்” என ஆவேசமாக குறிப்பிட்டார்.

இதன் வீடியோ காட்சி ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பாஜக அமைச்சர்களும், தலைவர்களும் எடியூரப்பாவின் பேச்சால் அதிருப்தி அடைந்துள்ளனர். கட்சி மேலிடத்தை பகிரங்கமாக விமர்சித்த எடியூரப்பா குறித்து தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு புகார் அனுப்பியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா ஆகியோர் நேற்று முன்தினம் ஆளுநர் வாஜூபாய் வாலாவை சந்தித்து மனு அளித்தனர். அதில், “காங்கிரஸ், மஜதவை சேர்ந்த 17 எம்எல்ஏக்களை அமித் ஷாவும், எடியூரப்பாவும் தூண்டிவிட்டே முதல்வர் குமாரசாமி தலைமையிலான ஆட்சியை கவிழ்த்ததாக எடியூரப்பா தற்போது வாக்குமூலம் அளித்துள்ளார். அப்பட்டமான ஜனநாயக படுகொலையைச் செய்த எடியூரப்பா தலைமையிலான அரசை உடனடியாக கலைக்க குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்ய வேண்டும்” என கோரியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x