

கிரிதி(ஜார்க்கண்ட்)
ஜார்க்கண்டில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் ஜார்க் கண்ட் விகாஸ் மோர்ச்சா (பிரஜா தந்திரிக்) கட்சி (ஜேவிஎம்(பி)) தனித்துப் போட்டியிடும் என அதன் தலைவரும், முன்னாள் முதல்வருமான பாபுலால் மராண்டி நேற்று தெரிவித்தார்.
ஜார்க்கண்ட் சட்டப்பேரவை 81 தொகுதிகளை கொண்டது. இதற்கு 5 கட்டங்களாக நவம்பர் 30 - டிசம்பர் 20-க்கு இடைப்பட்ட காலத்தில் தேர்தல் நடக்கிறது.
தேர்தல் முடிவுகள் டிசம்பர் 23ம் தேதி வெளியாகும் என தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஜேவிஎம் (பி) கட்சி மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் இந்த தேர்தலில் கூட்டணியிலிருந்து விலகி தனித்துப் போட்டியிடுவதாக பாபுலால் மராண்டி தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு எதிர்க்கட்சிகளுடன் பேச்சு நடந்த முயற்சித்தேன்.யாரும் பேச முன்வராததால் தனித்துப் போட்டியிடுகிறோம். வேட்பாளர் கள் தேர்வுக்குமுன் தொகுதிகளில் உள்ள கட்சி நிர்வாகிகளை அழைத்து நவம்பர் 5. 6 தேதிகளில் ஆலோசிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஏப்ரல், மே மாதத்தில் நடந்த மக்களவைத் தேர்தலின்போது காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் ஜேவிஎம்பி கட்சி கூட்டணி வைத்தது. மொத்தமுள்ள 14 மக்களவைத் தொகுதிகளில் கோட்டா தொகுதியில் மட்டும் இந்த கட்சி போட்டியிட்டது.
சட்டப்பேரவைத்தேர்தலில் தனித்துப்போட்டியிடும் இந்த கட்சி 81 தொகுதிகளிலும் போட்டி யிடுவதாக அறிவித்துள்ளது.
பிஹாரிலிருந்து 2000-ம் ஆண்டு ஜார்க்கண்ட் பிரிக்கப்பட்டபோது அந்த மாநிலத்தின் முதலாவது முதல்வர் என்ற பெருமையைப் பெற்றவர் மராண்டி என்பது குறிப்பிடத்தக்கது.
பிடிஐ